2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தி, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர்கொண்ட நீதியரசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

