யாழ்ப்பாணம் – பூம்புகாரில் கடந்த 2021ஆம் ஆண்டு குடும்பத்தலைவர் ஒருவரைப் படுகொலை செய்த குற்றத்துக்காக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
2021ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் பூம்புகாரில் குடும்பத்தலைவர் ஒருவர் திருவு பலகையால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.எனினும் கணவன் மின்குமிழ் மாற்றுகின்றபோது தடுக்கி விழுந்ததாக மனைவி நாடகாமாடியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலைசெய்யப்பட்ட நபரின் மனைவியையும், அவருடன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவில் இருந்தார் எனக் கருதப்படும் நபரையும் சந்தேகநபர்களாகக் கைதுசெய்து வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றையதினம் தீர்ப்புக்காக எடுக்கப்பட்டது. இதன்போது, உயிரிழந்தவரின் மனைவியை குற்றவாளியாக அடையாளம்கண்ட யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது.
அதேநேரம் மற்றையநபர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்டவருடைய மனைவியின் சார்பில் சட்டத்தரணி ரமணனும், குற்றஞ்சாட்டப்பட்ட மற்றைய நபரின் சார்பில் சட்டத்தரணி கௌதமனும் முன்னிலையானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

