31.7 C
Colombo
Sunday, November 29, 2026

பங்களாதேஷில் போராட்டத்தில் வன்முறை – 105 பேர் பலி – 2500 பேர் காயம்

பங்களாதேஷில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் பலியானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். பொலிஸார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள்.

இதுபோன்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. 2500 வரையானவர்கள் காயமடைந்துள்ளனர்.

போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் பொலிஸார் உபயோகித்து வருகின்றனர். போராட்டம் தொடர்வதால் ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

(Indian express)

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles