தென்னாசியாவில் உள்ள ஆப்கானிஸ்தானை இனிமேல் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan)என தலிபான்கள் பிரகடனப்படுத்தவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்ற நிலையில் தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி நாட்டை முழுமையாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தலிபான்கள் அந்த நகரை நோக்கி முன்னேறினர்.
முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை (15) தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்தனர். நாங்கள் சண்டையிட விரும்பவில்லை, சமாதான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்தது
இந்நிலையில், காபூல் நகரை தங்கள் வசமாக்கிய தலிபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றினர். தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் உப ஜனாதிபதி அம்ருல்லா சாலேயும், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையும் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

