கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புதுவருட கொண்டாட்ட காலங்களில் மதுசார பாவனை குறைவடைந்துள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது, கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுசார பாவனையின் நிலைமை மற்றும்; அவை தொடர்பான தகவல்களை ஆராய்ந்து பார்பதற்காக கணக்கெடுப்பொன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில், இலங்கையின் அனைத்து மாகாணங்களும் பிரதிநிதித்துவப்படும் வகையில் 415 நபர்களிடம் தகவல்கள் பெறப்பட்டன. பங்குபற்றுனர்களில்;, 46.2 வீதமானோர் பெண்களும் (192) மற்றும் 53.7 வீதமானோர் ஆண்களும் (223) ஆவர்.
தமிழ், சிங்கள புத்தாண்டில் மதுசார பாவனையில் வீழ்ச்சி!
https://t.co/vV8cBrq97s#ADIC #Alchacol #lka #SriLanka pic.twitter.com/Tgs1igxdfl
— Jaffnagallery News (@JaffnaGallery) May 9, 2024
கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புதுவருட கொண்டாட்ட காலங்களில் மதுசார பாவனை குறைவடைந்துள்ளதாக இக்கணக்கெடுப்பிற்கு பங்குபற்றியவர்களில் 64.4 (267 நபர்கள்) வீதத்தினர் தெரிவித்தனர். மேலும் 26 வீதத்தினர்; (107 நபர்கள்) இக்காலகட்டத்தில் மதுசார பாவனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் 10 வீதத்தினர் (41 நபர்கள்) இந்த ஆண்டு புதுவருட கொண்டாட்ட காலங்களில் மதுசார பாவனை அதிகரித்திருந்தது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுவருட கொண்டாட்டக் காலங்களில் மதுசார பாவனை குறைவடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பாக கருத்துக்களை வினவிய போது, மதுசாரத்தின் விலை அதிகரிப்பே மதுசார பாவனை குறைவடைவதற்கான வலுவான காரணம் என 71.5 பங்குபற்றுவனர்கள் தெரிவித்தனர். மேலும், குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பு, சுகாதார பிரச்சினைகள்; ஆகியவையும் மதுசார பாவனை குறைவடைவதற்கு காரணமாக அமைந்ததுடன் மதுசார பாவனை அர்த்தமற்றதொன்று என்கின்ற தெளிவு ஏற்பட்டமையும் மதுசார பாவனை குறைவடைந்தமைக்கு காரணமாக அமைந்தது எனவும் கருத்துக்களை பதிவிட்டனர்.
கடந்த ஆண்டு புதுவருட கொண்டாட்டத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடக் கொண்டாட்டத்தில் மதுசார பாவனையை காரணமாக வைத்து மேற்கொள்ளும் கூச்சல்கள், சண்டைகள் போன்றன குறைவடைந்திருந்தன என கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 70.8 வீதமானோர் தெரிவித்திருந்தனர், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக 7.8 வீதத்தினர்; கருத்து தெரிவித்துள்ளதோடு. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுபோன்ற சம்பவங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என 22.4 வீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுவருட காலத்தில், சமூக ஊடகங்கள் வாயிலாக சாராயம் பியர் பாவனையை கவர்ச்சியாகக் காண்பித்தமை தொடர்பாகவும் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்தின் படி (NATA), அனைத்து வகையான மதுசார வகைகள் மற்றும் புகைப்பொருட்களின் விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் இவ்வருட புத்தாண்டு காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் வாயிலாக இது போன்ற விளம்பரங்களை பார்த்ததாக 71.4 வீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகளின்படி, புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுசார பாவனை குறைவடைந்துள்ளமை மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மேலும் மதுசார பாவனையை காரணமாக வைத்து மேற்கொள்ளப்படும் சண்டைகள் குறைவடைந்துள்ளதோடு. மதுசாரம் மீதான வரி அதிகரிக்கப்பட்டு அதனூடு விலை அதிகரித்தமையானது புத்தாண்டு காலத்தில்; மதுசார பாவனை குறைவடைந்தமைக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மதுசார பாவனை குறைவடைகின்றமை ஒட்டு மொத்த நாட்டிற்கும் பலனளிக்கும். சுகாதாரச் செலவுகளைக் குறைப்பதற்கும், சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை அதிகரிப்பதற்கும் மதுசார பாவனையின் வீழச்சி பிரதான காரணியாக அமைகின்றது. கடந்த வருடத்தில் இலங்கையில் மதுசாரத்திற்கான வரி 34 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை இந்த சாதகமான நிலைமைக்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆண்டு கலால் வரி அறிக்கைகளிற்கு அமைய, கலால் வரி அதிகரிப்பின மூலம்; நாட்டின் கலால் வரி வருமானம் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் கலால் வருமானம் 165.2 பில்லியன் ரூபாவாகவும், 2023 ஆம் ஆண்டில் கலால் வருமானம் 181.10 பில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டது.
அதன்படி, 2023ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் கலால் வருமானம் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது. மேலும் புத்தாண்டு காலத்தில் மதுசார பாவனை குறைவடைந்துள்ளதாக இக்கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலைமை அனைத்து விதத்திலும் நன்மை பயக்கும் ஒரு விடயமாகும். அதாவது கலால் வரி அதிகரிப்பின் மூலம் மதுசார பாவனை குறைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் வருமானமும் அதிகரித்துள்ளது. ஆனால், சில அரசியல்வாதிகள் மற்றும் ஒருதலைப்பட்சமான பொருளாதார நிபுணர்கள் கலால் வரி குறித்து நேர்மறையான கருத்தை கொண்டுள்ளனர், எனினும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம் (UNDP) 2023ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின்படி, எமது நாடு மதுசார பாவனையால் ஏற்படும் சுகாதார செலவீனத்திற்கு 237 பில்லியன் ரூபா செலீடுவதாக குறிப்பிட்டுள்ளது. இத்தொகை கலால் வரியினால் கிடைக்கப்பெறும் வருமானத்தை விடவும் அதிகமான தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும்;, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை சட்டத்தை மீறும் வகையில் மதுசார நிறுவனங்கள் பல்வேறு வகைகளிலும் தங்களது விளம்பரங்களை மேற்கொண்டு சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து மக்களையும் இலக்கு வைத்து நெறிமுறையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் மதுசார பாவனையை ஊக்குவிக்கின்றன என்பது இக்கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி தெரியவந்துள்ள மிகவும் விஷேடமான விடயமாகும்.
பாவனையை குறைப்பதற்கும், மதுசார பாவனையால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை குறைப்பதற்கும், நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் மதுசாரத்திற்கான வரியை அதிகரிப்பதானது சிறந்தவொரு வழிமுறையாக அமைகின்றது. ஆகவே மதுசாரத்திற்கான முறையான விலையேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும், இளைஞர்களையும், சிறுவரகளையும் இலக்கு வைத்து மதுசார நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை தடுப்பதற்காகவும் காவல்துறை மற்றும் கலால் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) கேட்டுக்கொள்கின்றது.
தகவல் – மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்

