இலங்கை முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
அத்தோடு எதிர்வரும் 21ம் திகதி ஈஸ்டர் தாக்குதலில் இரண்டாம் ஆண்டு பூர்த்தி நினைவு கூறப்படவுள்ள நிலையலேயே, தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை இந்த மாதம் நாளை மாலை 4 மணி முதல், 21ம் திகதி(நாளை மறுதினம் மதியம் 12 மணி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் எதிர்வரும் 20ம் திகதி மற்றும் 21ம் திகதி நடைபெறவுள்ள விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்தலை முன்னிட்டே இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக வாகனங்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித அந்தோனியார் மாவத்தை : ஜிந்துபிட்டி சுற்றுவட்டம் முதல் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் நோக்கி பயணிக்க தடை விதிக்கப்படுகின்றது.
இராமநாதன் மாவத்தை : ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை நோக்கி வீதியில் பயணித்த தடை விதிக்கப்படுகின்றது.
கிறிஸ்டி பெரேரா மாவத்தை : ஜம்பட்டாவீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து கொச்சிக்கடை தேவாலயம் நோக்கி வீதிக்குள் பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வீதிகளை தவிர்த்து, மாற்று வீதிகளின் ஊடாக தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

