தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேல் இனியும் நம்பிக்கை வைத்திருக்க முடியாது என தெரிவித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் 12ம் திகதியிலிருந்து தொடர் போராட்டங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களதும், மாவட்ட செயலாளர்களதும் கலந்துகொண்ட கூட்டம் 19ம் திகதி நடைபெற்ற நிலையில் குறித்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பிரமுகரும் ஊடகப் பேச்சாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,குறித்த கலந்துரையாடலில் முக்கியமாக, கடந்த 3ம் திகதி ஆறு கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்ததற்கு பிற்பாடு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
அதில் முக்கியமாக, அனுர குமார திசாநாயக்கவுடைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பாக, அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறுபட்ட உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. பிரத்தியேகமாக, தமிழ் மக்களுக்கு பல உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. முப்படைகளும் கையகப்படுத்தியிருக்கக்கூடிய காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டது. மாகாண சபை தேர்தல்கள் அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ஒரு வருடத்திற்குள் நடக்கும் என்று கூறப்பட்டது. இப்பொழுது இரண்டு வருடங்கள் முடிந்தும் அது நடைபெறுவதாக இல்லை. இரண்டு வருடமாகியும் கூட காணிகள் விடுவிப்பு என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாகவே நீக்கப்படும் என்று கூறினார்கள். இப்பொழுது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக, இரண்டு வருஷத்திற்கு பிற்பாடு, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான ஒரு சட்டம் என்று ஒரு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்திருப்பதாக இப்பொழுது சொல்கிறார்கள்.
அரசியல் கைதிகளுடைய விடுவிப்பு தொடர்பாகவும், இப்பொழுது “அரசியல் கைதிகள் என்று யாருமில்லை” என்று ஒரு புதிய கருத்தையும் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்த காலகட்டத்திலும், பிற்பாடு எதிர் தரப்பில் இருந்தபொழுதும், அவர்கள் அரசியல் கைதிகள் விடுவிப்பு சம்பந்தமாக அவர்களும் குரல் கொடுத்தும் இருந்தார்கள்.
இதேபோன்றுதான் இப்பொழுது பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கொண்டு வருகிறது. தையிட்டி, மயிலிட்டி, வசாவிளான், கேப்பாப்பிலவு போன்ற இடங்களில் காணி விடுவிப்பு தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. இதேபோல கன்னியா வெந்நீரூற்று, அதில் மீண்டும் புத்த கோயில் கட்டுவதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் அங்கு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதைவிட மட்டக்களப்பில் மேச்சல் தரை விவகாரம் என்பது பல நாட்களாக, ஆயிரக்கணக்கான நாட்களை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாங்கள் வந்தால் மேச்சல் தரைகள் மீள கொடுக்கப்படும் என்று கூறினார்கள்.
ஆகவே, மொத்தத்தில் நாங்கள் பார்ப்போமாக இருந்தால், தங்களுக்கு வாக்களிக்கும்படியும், தாம் பதவிக்கு வந்தால் செய்யக்கூடியவை என்ற விடயங்கள், அதுவும் உடனடியாக ஒரு மாதத்திற்குள், ஒரு வருடத்திற்குள் செய்யக்கூடியவை என்று சொல்லப்பட்ட எந்த விடயங்களும் செய்யப்படவில்லை.
இப்பொழுது வருகிற செப்டம்பர் மாதம் 12ம் திகதி இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடம் முடிவடையக்கூடிய நிலையில், இந்த இரண்டு வருஷத்திற்கு பிற்பாடும் இவர்கள் என்ன செய்ய எதிர்பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. கடந்த 3ம் திகதி வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் இணைந்து இவரை சந்தித்தபொழுது, நாங்கள் ஒரு சில விடயங்களை மாத்திரம்தான் முன்வைத்தோம். முக்கியமாக மாகாண சபை தேர்தல்கள் என்பது நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். அதற்கு ஆக்கப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை. மாறாக பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை வந்ததற்கு பிற்பாடு அதைப்பற்றி யோசிக்கலாம் என்று ஒரு பதில் கூறப்பட்டது.
அதேபோல் காணிகள் விடுவிப்பு தொடர்பாக நாங்கள் கேட்டபொழுதும் கூட, அது முப்படையினரிடம் அது பற்றிய பட்டியல்கள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அவை கிடைத்தபின் அதைப்பற்றி யோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடம் முடிந்துவிட்டும், இன்னும் எந்தெந்த காணிகள் விடுவிப்பது என்ற பட்டியலே அவர்களிடம் இல்லை என்ற தோரணையில் தான் ஜனாதிபதியினுடைய பதில் என்பது அமைந்திருந்தது.
ஆகவே, எம்மை பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் கடந்த இரண்டு வருடத்திற்குள் செய்ய வேண்டிய பல விஷயங்களை செய்திருக்க முடியும். காணிகளை முழுமையாக விடுவித்திருக்க முடியும், மாகாண சபை தேர்தலை நடத்தியிருக்க முடியும். மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக வரவு செலவு திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. பழைய சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துக்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் இவர்களும் தாங்கள் வந்தால் மாகாண சபை தேர்தலை நடத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள். ஆனால் இவ்வாறு இருந்தும் கூட, இவர்களால் இதனை செய்ய முடியவில்லை.
இனிமேல் இவர்கள் இதனை செய்வார்களா? இரண்டு வருஷம் முடிந்திருக்கிறது. அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை கீழ் இறங்கிக் கொண்டிருக்கிறது. அது சிங்கள மக்கள் மத்தியிலும் சரி, தமிழ் மக்கள் மத்தியிலும் சரி, நாள் போகப் போக மக்களிடம் இருந்த எதிர்பார்ப்புகள் மங்கிக் கொண்டு போகத் தொடங்கியிருக்கிறது.
இவர்கள் காணிகளை விடுவிப்பார்களா, அல்லது கைதிகளை விடுவிப்பார்களா, காணாமலாக்கப்பட்டோருக்கு பரிகாரங்கள் காண்பார்களா என்று சொல்லிச் சொன்னால் நிச்சயமாக மக்கள் இப்பொழுது இவர்களும் முன்னர் இருந்த அரசாங்கத்தைப் மாதிரி எதுவுமே செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை இழப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் 2029ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். அதேபோல 2027, 28ம் ஆண்டுகளில் இவர்கள் உலகளவில் வேண்டிய கடன்களை மீள செலுத்த வேண்டியிருக்கிறது. மீள செலுத்த வேண்டுமாக இருந்தால் பல பில்லியன் டொலர்கள் இவர்களுக்கு மேலதிகமாக தேவையாக இருக்கிறது. அந்த டொலர்கள் இப்பொழுது முழுமையாக அவர்களிடம் கைவசம் இல்லை. அரைகுறையாக கொஞ்சம் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் பொருளாதார ரீதியான கஷ்டங்களையும் எதிர்காலத்தில் இவர்கள் மிக நிறையவே எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைமை உருவாகி வருகிறது.
அதற்கு மேலதிகமாக வறட்சி ஒரு பக்கம். சில சமயங்களில் எல் நினோ காலநிலை நிலவரம் தொடர்பாக வரக்கூடிய, எதிர்பார்க்கக்கூடிய வெள்ள நிலவரங்கள் என்பது இன்னொரு புறம். ஆகவே இயற்கை சீற்றங்கள் என்பதும் மிகப்பெரிய அளவில் இலங்கையையும் பாதிக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசாங்கம் எதிர்காலத்தில் அவர்கள் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புவதற்கான எந்த அடித்தளங்களும் இல்லை.
இப்படி பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கக்கூடிய நிலையில், காலம் செல்லச் செல்ல இவர்கள் மேல் மக்களுக்கு வைத்திருந்த நம்பிக்கை என்பது குறைந்து கொண்டு போகின்ற பொழுது, தமிழ் மக்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை இவர்கள் காப்பாற்றுவார்களா? காப்பாற்றினால் அவ்வாறு செய்யாவிட்டால் நிச்சயமாக சிங்கள மக்கள் மத்தியில் அவர்களுடைய வாக்கு வங்கியை இழந்து விடுவோம், இனவாத சக்திகள் மேலெழுந்து குரல் கொடுக்கும் என்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கி இருக்கப் போகிறார்கள்.
ஆகவே,இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நிச்சயமாக தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்க முடியாது என்பது ஒரு முக்கியமான விடயமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினுடைய இந்த கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது. இவர்கள் எதனையும் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு மேல் தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருப்பது தவறானது என்பதுடன், இதனை மக்களுக்கு நாங்கள் தெளிவூட்ட வேண்டும் என்பதும், இதற்கு எதிராக தொடர் போராட்ட நடவடிக்கைகளை சகலருடனும் இணைந்து, மக்களையும் அணிதிரட்டிய வகையில், என்னென்ன சாத்வீகமான வழியில் என்னென்ன போராட்டங்களை முன்னெடுக்க முடியுமோ, அந்த வகையான சகலவிதமான தொடர் போராட்டங்களை வருகின்ற செப்டம்பர் மாதம் 12ம் திகதியிலிருந்து தொடர் போராட்டங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்ட அடிப்படையிலும் சரி, மாகாண அடிப்படையிலும் சரி, பல்வேறுபட்ட விதமான போராட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.
அதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய ஐந்து கட்சிகள் சார்பாக ஒரு ஏற்பாட்டுக் குழுவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆகவே எம்முடன் இணைந்து இந்த விடயத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பங்குபெறக்கூடிய அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம் – என்றார்.

