24.5 C
Colombo
Friday, October 9, 2026

வடக்கில் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு தமிழகத்தில் திட்டமிட்டு மறைப்பு – மோடி தம்மிடம் தெரிவித்ததாக கஜேந்திரகுமார் எம்பி தகவல்

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலால் வடக்கில் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து தமிழ்நாட்டில் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தம்மிடம் சொன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட”காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” என்ற நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,அண்மையில் இங்கு வந்த இந்திய பிரதமருடன் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம். எங்களுடன் மேலும் இரண்டு கட்சிகள் கலந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அனைவருமே இந்திய மீனவர்களால் எமது மக்கள் மோசமான பாதிப்படைவது தொடர்பாக மிகவும் உறுதியாக சொன்னோம்.

அந்தக் கருத்தை நாம் வலியுறுத்திய பொழுது இந்திய பிரதமர் மோடி,

இந்தியாவின் தமிழ்நாட்டிலே இங்குள்ள கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது கருத்து திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகிறது. ஆகவே அந்த தொழிலுக்கு பின்னால் இருக்கக்கூடிய முதலாளிகள் அந்த கடற்றொழிலாளர்களை தூண்டி தொடர்ந்து சட்டவிரோத செயல்களை செய்வதற்கு வழிகளை தேடுகிறார்கள். தமிழக கடற்றொழிலாளர்கள் இங்கே வந்து செல்கின்ற போது இலங்கை அரசு தங்களை பழிவாங்குவதாகவும் இலங்கை அரசே தமிழ் மக்களையும் பழி வாங்குவதாகவும் ஆகவே இலங்கை அரசு எதிரி. அந்த அரசின் செயற்பாடுகளுக்கு அடிபணிய கூடாது என்ற வகையிலேயே முதலாளிகளின் பேச்சை கேட்டு தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து செயற்படுகிறார்கள் – என்றார்.

அப்படிப்பட்ட சூழலிலேயே ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கடற்றொழிலாளர்களுடைய செயற்பாடுகளால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் படுகின்ற கஷ்டங்களையும் பாதிப்புகளையும் நேரடியாக விளங்கப்படுத்துவதற்கும் பெரிய மட்டத்தில் உரையாடலை செய்வதற்கும் இந்திய அரசு சந்தர்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

நாங்களும் ஒத்துழைக்க தயார். இந்திய மீனவர்கள் எங்கள் கடற்பரப்புக்குள் வருகின்ற செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டே ஆக வேண்டும். இந்திய அரசு அதனை செய்ய விட்டாலும் இலங்கை அரசு செய்வதற்குரிய அழுத்தங்களை தொடர்ந்து தீவிரமாக முன்னெடுப்பதாக தெரிவித்தோம் – என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles