25 C
Colombo
Saturday, October 10, 2026

மாற்றம் என்று சொல்பவர்களால் எதையுமே மாற்ற முடியாது – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மாற்றம் என்று சொல்பவர்களால் எதையுமே மாற்ற முடியாது. அவர்கள் சமாளித்துச் செல்லவே முற்படுவார்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான தீர்வை அவர்களால் தர முடியாது என தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மண்ணுக்காக மரணித்தவர்களையும் மண்ணுக்காக தியாகம் செய்தவர்களையும் எண்ணி தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றபோதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.லஜிதர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த கால வரலாறுகளை இன்றைய தலைமுறை நினைத்துப் பார்ப்பது இல்லை. 2009க்கு முதல் எமது போராட்டம் 40 வருடங்கள் ஜனநாயக ரீதியிலும் 30 வருடம் ஆயுத ரீதியிலும் நடைபெற்றது. அந்த எழுபது வருட போராட்டத்தை மாற்றம் என்ற மாயச் சூழலுக்குள் இன்று புதைக்க நினைக்கின்றோம். இந்த தேர்தலில் மாற்றம் என்ற மாயச் சூழலுக்குள் புதைக்கப்படுவோமாக இருந்தால், நாங்கள் ஏதாவது விதத்தில் அதற்கு காரணமாக இருப்போமாக இருந்தால் 70 வருட அரசியல் நீர்த்துப் போவதற்கு அது சமனானது.

நாங்கள் எந்தவொரு கட்டத்திலும் மண்ணுக்காக உயிர் நீத்த மாவீரர்களையோ மண்ணுக்காக போராடிய நாட்டுப் பற்றாளர்களையோ விட்டுக் கொடுக்கக் கூடாது. அதற்கேற்ற மனநிலையில் நாம் செயல்பட வேண்டும். அதனையே மாணவர் ஒன்றியமாகவும் பல்கலைக்கழக சமூகமாகவும் நாம் விரும்புகிறோம்.

 

மாற்றம் என்று சொல்லக்கூடிய நபர்கள் தேர்தலுக்கு முன்னொரு கதையும், தேர்தலுக்குப் பின்னொரு கதையும் சொல்வார்கள். இந்த மண்ணில் நினைவேந்தல்களுக்கு இன்றளவும் கூட தடை விதிக்கப்படுகின்றது. அன்னை பூபதியின் நினைவேந்தலில் நடைபவனியை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தின் ஊடாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அகிம்சைக்காக போராடி உயிர் நீத்த நாட்டுப் பற்றாளர்களின் நினைவுகளையே இந்த சமூகத்தில் கடத்தக்கூடாது என நினைக்கின்றார்கள் என்றால் மாற்றம் என்ற ரீதியில் எல்லாம் சமூகங்களையும் இவர்கள் இணைப்பார்களா என்பது கேள்விக்குறியே?

 

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்போம் என்று சொன்னவர்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் பேச்சுரிமையையும் நினைவு கூறும் உரிமையை முடக்குகிறார்கள். இவ்வாறான நிலையில் எப்படி அடுத்த கட்டத்திற்கு எல்லா இனத்தையும் ஒருங்கிணைத்து பயணிப்பார்கள் என்பது மிகப்பெரிய எதிரும் புதிருமான விடயமாகவே காணப்படுகிறது.

 

மாற்றம் என்ற மாயைக்குள் மயங்கி இவ்வளவு கால அரசியலையும் உண்மையாக மண்ணுக்கு போராடி மடிந்த மாவீரர்களையும் நாம் மறக்கக்கூடாது. அவர்களை மனதில் நிறுத்தி செயற்பட வேண்டும்.

 

தமிழ் மக்களிடத்தில் யுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சினை, யுத்தம் ஏற்பட்டதற்கான பிரச்சினை என இரண்டு வகையான பிரச்சினைகள் இருக்கின்றது. இந்த இரண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும். மாறி மாறி வருகின்ற எந்த பேரினவாத அரசாங்கங்களும் இதற்கு எந்த தீர்வையும் தந்தது கிடையாது.

 

எத்தனையோ தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளையும் உறவுகளையும் தொலைத்து விட்டு வீதியில் இருக்கின்றார்கள். அன்னை பூபதி அம்மா போல மண்ணுக்கு போராடிய தாய்மார்கள் இன்றும் பிள்ளைகளை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கான பதில்கள் இன்று வரை கொடுக்கப்படவில்லை. தமிழ் சமூகம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகிறது.

கண்துடைப்புகளும் போலியான நிலைப்பாடுகளும் தமிழ் சமூகத்தை ஏமாற்றுவதற்கு மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த மண் மிகப்பெரிய யுத்தத்தை சந்தித்தது. யுத்தத்திற்கான காரணத்தையும் யுத்தத்துக்கான அரசியலையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமது தமிழ் தேசிய கட்சிகளிடைய முரண்பாடுகள் இருக்கலாம். தலைமைகளிடம் முரண்பாடுகள் இருக்கலாம். அவர்களை பிடிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் தமிழ் தேசிய அரசியலை தாண்டி தமிழ் மக்கள் செல்லக்கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடாகவும் ஒட்டுமொத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் நிலைப்பாடாகவும் இருக்கிறது – என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles