கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உயர்தரப் பாடப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றதுடன் யாழ்ப்பாண மாவட்டத்திலும் முதலிடம் பெற்று வரலாற்றுத் தடம் பதித்தார்!

உயர்தரத்தில் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கமலநாதன் மதுஜா என்பவர் 3A பெறுபேறு பெற்று யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் முதல் நிலையும் தேசியரீதியில் 6ம் நிலையையும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய மகா வித்தியாலய மாணவி கனகேஸ்வரன் கவீனா மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசியமட்டத்தில் 17ம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
பழைய பாடத் திட்டத்திற்கமைய கலைப்பிரிவில் யாழ்.மாவட்டத்தில் முதல் நிலையும் தேசிய அளவில் 8ம் நிலையையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் கிரிகரன் சந்தோஷ் பெற்றுள்ளார்.
வணிகப் பிரிவின் பழைய பாடத் திட்டத்திற்கமைய தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த மகேந்திரன் சுஜீபன் என்ற மாணவன் மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
கலைப் பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கு அமைய சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த குணநாயகம் நிலானி யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன் சிறீகாந்தன் பிரசாந் வணிகப் பிரிவில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயிலும் சபாரத்தினம் துலக்சிகன்
தொழில் நுட்ப பிரிவில் பழைய பாடத்திட்டத்தில் மாவட்ட நிலையில் முதலாவது இடத்தையும் தேசிய ரீதியில் 13வது நிலையையும் பெற்றுள்ளார்.

