இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்ஹை நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
அண்மையில் இடம்பெற்ற மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்விற்கு எதிராக எதிர்க்கட்சி வேட்பாளர் மொஹமட் முய்சு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் நேற்று மாலைதீவு சென்றுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி சோலிஹ் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் அண்மைய பொருளாதார மந்தநிலையிலிருந்து தேசம் எவ்வாறு படிப்படியாக மீள்கிறது என்பது குறித்து விரிவாகப் பேசினர்.
நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
தனது நிர்வாகத்தின் கீழ் பல இருதரப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் உள்ளடங்கிய தமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒத்துழைத்தமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு மாலைதீவு ஜனாதிபதி மேலும் நன்றி தெரிவித்தார்.
தேவைப்படும் நேரத்தில் மாலைதீவு வழங்கிய உதவிகள் மற்றும் ஆதரவுகளுக்கு இலங்கை ஜனாதிபதியும் பாராட்டு தெரிவித்தார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் தங்களின் நல்வாழ்த்துக்கள் மற்றும் செழிப்புகளை தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்கவை மாலைதீவு முதல் பெண்மணி ஃபஸ்னா அஹமட் சந்தித்தார்.


