விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த அன்பு முகாம் பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது 2 இலத்திரனியல் ஸ்கேனர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது பொலிஸ் தலைமையகத்தில் Tell IGP பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கைதானவர்கள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

