தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எங்களுடைய மக்களுக்கான அடிப்படை தேவைகள் கூட உடனடியாக பூர்த்தி செய்யாத நிலைமை காணப்படுகின்றது என குற்றஞ்சாட்டிய சாவகச்சேரி நகரசபை முன்னாள் உபதவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்தார்.
சமகால விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,மாற்றமென்ற கோஷத்தோடு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடக்கின்ற இந்த நேரத்திலே, தமிழ் மக்கள் எதிர்பார்த்த எந்த தீர்வுகளும் கிடைக்கப்பெறாத நிலையிலே, இன்றைய தினம் சாவகச்சேரி மாநகரிலே ஒரு மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.
உண்மையிலேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எங்களுடைய மக்களுக்கான அடிப்படை தேவைகள் கூட உடனடியாக பூர்த்தி செய்யாத நிலைமை காணப்படுகின்றது.
செம்மணி புதைகுழியிலே இன்றைக்கு 500 க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கே கண்டெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச விசாரணை கோரியும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச விசாரணை கோரியும், சிறைகளிலே அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் நாங்கள் மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திலே ஈடுபடவுள்ளோம்.
அதற்கு மேலாக, உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்திலே ‘பிரஜா சக்தி’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கி தலையிடுவதோடு மட்டுமல்லாமல், உள்ளூராட்சி மன்றங்களை முடக்கும் விதமாக ஆளுநரால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தவிசாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைக்கு எதிராகவும், அவருடைய எதேச்சதிகாரமான அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராகவும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, தென்மராட்சி மண்ணிலே நாங்கள் பாரியளவிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திலே ஈடுபடவுள்ளோம்.
இதற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும், தமிழ் தேசியம் சார்ந்து இயங்குகின்ற பொதுமக்களும், பொது அமைப்புகளும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், குறிப்பாக சாவகச்சேரி நகர வணிகர் கழகம், கொடிகாமம் வணிகர் கழகம், கைதடி வணிகர் கழகம், சாவகச்சேரி நகர முச்சக்கர வண்டி சங்கத்தினர், கொடிகாமம் முச்சக்கர வண்டி சங்கத்தினர், தென்மராட்சி சிற்றூர்தி சங்கத்தினர் உட்பட பலரும் இதற்கு தங்களது பாரிய ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியுள்ளார்கள்.
ஆகவே அனைத்து பொதுமக்களும் இன்றைய தினம் நடைபெறுகின்ற இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்திலே காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை பங்கெடுத்து, தங்கள் உணர்வு ரீதியான எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு, அணிதிரளுமாறு அனைத்து மக்களையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்.- என்றார்.

