என் பிள்ளையை இராணுவம் எட்டிப்பிடித்து இழுத்துக்கொண்டு போனது. இழுத்துக்கொண்டு போன பிள்ளையின் பின்னாலே நான் போனேன், அங்கே கொஞ்ச தூரத்தில் பக்கத்து வீட்டின் பின்புறத்தில் அம்மா என்று கூப்பிட்டு சத்தம் கேட்டது. ஒரு கொஞ்ச நேரத்தில் மூன்று சுட்டு சத்தம் கேட்டது என தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா தெரிவித்தார்.
மண்டைதீவு படுகொலை நினைவேந்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,1990 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 26 ஆம் திகதி, நாங்கள் ஒரு வீட்டில் உள்ள பங்கருக்குள் இருந்தோம். அந்த வீட்டில் விடிய 6 மணிக்கு இராணுவம் வந்தது.
வீட்டில் படுத்துக்கிடந்தவரை எழுப்பி எல்.டி.டி.ஈ (தமிழீழ விடுதலைப் புலிகள்) என்று சொல்லி பக்கத்திலிருந்த ஒரு பையன் சொன்னான். எல்.டி.டி.ஈ தானா என்று இராணுவம் கேட்க, நான் சொன்னேன் “இல்லை அவர்கள் எல்.டி.டி.ஈ இல்லை, நாங்கள் தொழில் செய்பவர் என்று சொல்லி சொன்னோம். அந்த பையன் பக்கத்துல நின்ற பையன் இல்லை இல்லை இல்லை, பூரா எல்.டி.டி.ஈ தான்” என்று சொன்னான்.
அதோடு என் பிள்ளையை எட்டிப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான். இழுத்துக்கொண்டு போன பிள்ளையின் பின்னாலே போனேன், அங்கே ஒரு கொஞ்ச தூரத்துக்கு பக்கத்துல வீட்டின் பின்புறத்தில் அம்மா என்று கூப்பிட்டு சத்தம் கேட்டது.
என்ர புருஷன் போய் கால்ல விழுந்து கெஞ்சி, என் பிள்ளையை விடுவிக்க கேட்டார். அவர்கள் கேட்கவில்லை. ஒரு கொஞ்ச நேரத்தில் மூன்று சுட்டு சத்தம் கேட்டது.
ஒரு பாதிரியார் வீட்டுக்கு கொண்டு போய் விட்டுவிட்டார்கள். அதுக்கப்புறம் அடுத்த நாள் நாங்கள் அங்கிருந்து கொமாண்டரை கேட்டு நடந்து போனோம்.
சாட்டியில போய் கொஞ்ச நாள் இருந்தோம். கொஞ்ச நாள் இருந்து போட்டு அங்கிருந்து உறவினர்கள் எங்களை கொண்டு பள்ளிக்கூடத்துல விட்டாங்க. அதுக்கப்புறம் நாங்கள் சிறுது காலம் பின்னர் திரும்பி வரும்போது வீடு வாசல் ஒன்றும் இல்லை.
அப்ப சனங்கள் எல்லாம் வந்திட்டு.
இந்தக் கிணத்துல உடுப்பு கிடக்கு, இந்தக் கிணத்துல தான் உன்ர பிள்ளையை போட்டது? என்டு ஒரு ஆள் சொன்னது. அந்தாள் இப்ப செத்திட்டு.
என் மகள் ஒரு பனியன் ஒன்று கண்டுபிடித்து இரத்தக் கறையோடு எடுத்துக்கொண்டு வந்தாள்.நாங்கள் அந்த பனியனை கொண்டு திரிஞ்சோம் கனகாலம். அதுக்கப்புறம் வீடு வாசல் இல்லை. நாங்கள் கொஞ்ச நாள் வீட்ல வந்து, ஒரு கொட்டில் போட்டு இருந்தோம். அப்புறம் இரண்டாம் முறையும் திரும்பி வர அந்த வீடும் இல்லாமல் குண்டு வச்சுட்டாங்க – என்றார்.

