செம்மணி மனித புதைகுழியில் பத்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக ஒரு என்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 56ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்று மூன்றாம் கட்டத்தின் அகழ்வு பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 583 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அனைத்து மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
பிற சான்றுப் பொருட்களாக அட்சரக் கூடு, காசு, மூன்று செப்பிலான மூன்று மோதிரங்கள் ஒன்றோடொன்று இணைந்தவாறு விரல் பகுதி எலும்பு கூட்டில் இருந்து மீட்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது – என்றார்.

