27.8 C
Colombo
Friday, August 21, 2026

ஆட்சியில் மட்டுமே மாற்றம் – காட்சியில் மாற்றமில்லை – சி.கா.செந்திவேல்

ஆட்சியிலும் பதவிகளிலும் மாற்றங்கள் வந்தனவே தவிர மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதாக இல்லை என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,நாடும் மக்களும் எதிர் நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும்,தீர்க்கப்படாது நீடித்துவரும் தேசிய இனங்கள் எதிர்நோக்கி வரும் தேசிய இனப் பிரச்சினைக்கும் உரிய தீர்வுகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையிலேயே ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வாக்களித்து பதவிக்குக் கொண்டு வந்தனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பாராளுமன்றத்திற்கும் தமது பிரச்சனைகளுக்குத் தீர்வு வரும் என்று நம்பியே கடந்த கால ஆட்சியாளர்களை நிராகரித்து தேசிய மக்கள் சக்தியினருக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் எட்டு மாதங்கள் கடந்த நிலையில் நாடும் மக்களும் எதிர்நோக்கியுள்ள மோசமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கும் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளடங்கிய தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணும் அறிகுறிகள் எதுவுமே காணப்படவில்லை. மக்களைத் திசை திருப்பி வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. பதவிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி அனுர குமார அரசாங்கம் கடும் மௌனம் காத்துவருகிறது. “வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் சொற்தொடர் பதவிக்கான வெறும் அலங்கார வார்த்தைகளாகி அவை மறக்கப்பட்டும் வருகின்றன. அதேவேளை அமெரிக்கா தலைமையிலான ஐ.எம்.எவ் எனும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனும்-அறாவட்டியும் தொடர்வதற்கு அதன் மோசமான நிபந்தனைகள் மறுபேச்சின்றி ஏற்கப்பட்டும் உள்ளன. அதன் விளைவே அண்மைய பதினைந்து வீத மின் கட்டண உயர்வாகும். அதே போன்றே வற்வரி உட்பட வரி விதிப்புகளிலும், ஐ எம் எவ் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலுமே மருந்துகள் உட்பட பொருட்களின் விலைகள் குறைவடைய முடியாது உள்ளன.அரிசி முதல் உப்புப் புளி வரையான அன்றாட உணவுப் பொருட்களை உழைக்கும் மக்கள் வாங்க முடியாது வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் கடும் பாதிப்புகளைப் பெற்று வருகின்றனர்.

மாற்று வழிதெரியாது மக்கள் திணறித் திண்டாடி நிற்கின்றனர். இந்நிலையில் ஆட்சியில் இருப்பவர்கள் எட்டு மாதங்களுக்கு முன்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் நினைவுபடுத்தத் தொடங்கியுள்ளனர். அதேவேளை இலங்கையின் வளங்கள் இந்திய ஆளும் வர்க்கக் கார்ப்பிரேட் பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது.ஜனாதிபதி அனுரவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இதுவரை பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தப்படவில்லை ஏன் என்பது தான் கேள்வியாக உள்ளது.

‘சிஸ்ரம் சேஞ்ச் – அமைப்பு மாற்றம்” என உரத்துப் பரப்புரை செய்து பதவிக்கு வந்தவர்கள் இன்று பதவிகளையும் ஆட்சி அதிகாரத்தையும் இறுகப் பற்றிக் கொண்டு இன்றைய நவகொலனிய நவதாராள முதலாளிய அமைப்பைப் பாதுகாத்து முன்கொண்டு செல்பவர்களாகத் தம்மை நிலை நிறுத்தி வருவதையே மக்கள் காணமுடிகிறது. ஆட்சி மாற்றம் வந்த போது இதுவரையான சொத்து சுகபோக உயர் ஆளும் வர்க்க ஆட்சிகளை விட நாட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் வரப்பிர சாதங்களைக் கொண்டு வரப்போகும் ஒரு ஆட்சியாக இருக்கும் என்றே வாக்களித்த மக்கள் நம்பினர். ஆனால் இன்றைய நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகள் வெறுமையடைந்து வருவதையே காணமுடிகிறது. ஆதலால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியப் பிடிக்குள்ளும், இந்தியப் பிராந்திய மேலாதிக்க வல்லரசு வலைக்குள்ளும் அகப்பட்டு நிற்கும் அனுர குமார திசநாயக்க தலைமையிலான இன்றைய ஆட்சியானது எந்தளவிற்கு நாட்டின் வளங்களைப் பாதுகாத்து தேசிய உற்பத்திப் பொருளாதாரத்தை திட்டமிட்டு முன்னெடுத்து அனைத்து மக்களினதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களினதும் நலன்கள், தேவைகள், உரிமைகளை எவ்வாறு நிலைநிறுத்தப் போகின்றது என்பதே இன்றைய பெரும் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

இந் நிலையில் எமது கட்சி பொருளாதார நெருக்கடிகளுக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகி நிற்கும் ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களோடும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும் இணைந்து நின்று மக்களின் நியாயமான கோரிக் கைகளுக்காகக் குரல் கொடுத்துப் போராடுவதே எமது உறுதியான நிலைப்பாடாகும் – என்றுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles