29.5 C
Colombo
Saturday, October 10, 2026

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சுமந்திரன் , சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர், பல கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், வாக்காளர்களை தெளிவுபடுத்தவும் பொது மன்றத்தில் பங்கேற்பது தொடர்பான விருப்பத்தை பகிரங்கமாக அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான செய்திக் குறிப்பில், எமது நாடு இன்று ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்றது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் இது ஒரு முக்கியப் புள்ளி ஆகும். நாம் பொருளாதாரத்தில் தன்நிறைவாக இருந்தோடு, மற்றவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாகவும் இருந்தோம்; சிங்கப்பூரின் லீ குவான் யூவுக்கும் கூட நாம் ஒரு மாதிரியாக காணப்பட்டோம்.

உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், உயர் கல்வி வரையிலான இலவசக் கல்வியையும், அனைத்து குடிமக்களுக்கும் இலவச சுகாதார சேவைகளையும் வழங்கக் கூடிய ஒரு நிலையில் இருந்தோம். இத்தகைய உயர்ந்த, ஆரோக்கியமான நிலையில் இருந்து, நாங்கள் கடன் பாதாளத்துக்குள் வீழ்ந்து, உத்தியோக பூர்வமாக “வங்குரோத்து நாடு” எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மூன்று தசாப்தங்களாக உள்நாட்டுப் போரிற்கு முகம்கொடுத்த நாம், அதன் பின் விளைவுகளிலிருந்து மீண்டெழுந்து அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை அடைவதற்கு இன்னமும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். உலகத்தில் மிக மோசமான ஊழல் நிறைந்த நாடாக நாம் காணபப்டுகின்றோம் . இதனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டு குடிமக்கள் கிளர்ச்சி செய்து வீதியில் இறங்கினர். அவர்கள் ஒட்டுமொத்த அமைப்பு முறை மாற்றத்திற்கு அழைப்பு விடுத்ததோடு ஒப்பீட்டளவில் வன்முறை இல்லாமல் கற்பனை செய்ய முடியாத அளவிலான மாற்றங்களைக் கொண்டு வந்தனர். நாட்டின் நிதியமைச்சரும் பிரதமரும் இராஜினாமா செய்ய வேண்டியிருந்ததுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் பாரிய விருப்பு வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறி அதனைத்தொடர்ந்து அவர் இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த மாற்றங்கள் வழமையான தேர்தல் முறைகள் மூலமாக அல்லாமல், மக்கள் எழுச்சியால் கொண்டுவரப்பட்டது. அதற்கு பின்பு குடிமக்கள் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயக ரீதியில் தங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை இப்பொழுது தான் பெறுகின்றனர்.

இந்த முக்கியமான தீர்மானமிக்க தருணத்தில், நாடு திரும்பவும் அமைதியையும் சுபீட்சத்தையும் அடைய வேண்டுமானால், தீவிரமாகத் தீர்க்கப்பட வேண்டிய சில முக்கியமான பிரச்சினைகளை மக்கள் முன் வைப்பது அவசியம் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக அல்லது முழுமையான அளவில் வாழும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து வரும், இந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவோம். ஒரு காலத்தில் தனிநாடு அமைத்து சுதந்திரமாக வாழ விரும்பிய, சமமான குடியுரிமை அந்தஸ்தை அடைய இன்னுமும் போராடிக்கொண்டிருக்கும் மக்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.

முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் போன்ற ஏனைய தமிழ் பேசும் சமூகங்களும் பெரும்பான்மைவாதத்தின் நுகத்தடியின் கீழ் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர். கோவிட் 19 இன் பரவலின் போது நியாயமற்றமுறையில் பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட விவகாரம் மற்றும் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது, அவர்களுக்கான அடிப்படை சம்பளம் என்பன அவர்களுக்கு எதிரான வரலாற்று அநீதிகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். இந்த பேரினவாத போக்குகள் நாட்டின் பெண்களையும் கணிசமான வழிகளில் பாதித்துள்ளன, இது அவர்கள் வாக்களிக்கும் மக்கள் தொகையில் 52% ஆக இருந்தபோதிலும் அவர்கள் கொண்டிருக்கும் மோசமான பிரதிநிதித்துவத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.

நிதி முறைகேடு, ஊழல் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாகவே ஆரம்பத்தில் நாடு கடன் மீள செலுத்த இயலாத நிலையினை அடைந்தது. நாம் வீழ்ந்துள்ள இவ் ஆழத்திலிருந்து மீள, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவி கோரப்பட்டது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதற்கும் நாட்டின் கடன் மீள அளிக்க முடியாத நிலையை அறிவிப்பதற்கும் நீண்ட நாட்களுக்கு முன்பே, IMF க்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினோம். நமது சமூகங்களின் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் பிரிவினரின் பாதுகாப்பில் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம். IMF, பொருளாதார சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய சவாலாக “ஊழல் பாதிப்புகளை” அடையாளம் கண்டுள்ளது மேலும் அதை தொடர்ந்து “ஆட்சிமுறையினை பரிசோதித்தல்”, கட்டமைப்பில் உள்ள மற்றொரு பெரிய பலவீனத்தை சமிக்ஞை செய்ததுள்ளது. IMF உடனான ஒப்பந்தம் சரியாகக் கையாளப்படாததால், இந்தத் திட்டத்தின் மூலம் நம் நாட்டில் ஏழைகள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் தொகை 2019 இல் 14 % ஆக காணப்பட்டு தற்போது அது 30 % ஆக உயர்ந்துள்ளது; மேலான வாழ்க்கை ஒன்றிற்கான எதிர்பார்ப்புடன் நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தும் திறன் கொண்டவர்கள் மற்றும் ஏழைகளும் பிழைப்பு நோக்கங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறும் ஒரு பெரிய மூளைசாலிகளின் வெளியேற்றம் உள்ளது. அரசாங்கம் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டது, இது பிரத்தியேகமாக – இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் அற்ப சேமிப்பாகிய ஊழியர் சேமலாப வைப்பு நிதியில் இருந்தே பெறப்பட்டது. மறைமுக வரிகள் ஏழைகள் மீது பெரும் சுமையை சுமத்தியுள்ள அதே நேரத்தில் பல பணக்காரர்களும் சக்திவாய்ந்த ஆளுமைகளும் தண்டனையின்றி வரி செலுத்துவதைத் தொடர்ந்து ஏய்த்து வருகின்றனர். தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சடுதியாக ரூ. 1.15 பில்லியனினை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு சற்று முன்பு வரியாக செலுத்தியது கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும். வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக இலஞ்சம் கொடுத்து வரும் பலரிடம் இருந்து நேரடி வரி வசூலிக்க அரசு எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. புகையிலை மற்றும் மதுபானம் மீதான வரி போன்ற எளிய தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதிலிருந்து அரசாங்கத்தின் வரிக் கொள்கை திசைதிருப்பப்பட்டுள்ளது, என்பதை காட்டுகின்றது, இது அதிக ஊழலின் காரணமாக இருக்கலாம்.

இந்தப் பின்னணியில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் உயர் பதவிகளைப் பெறுவதற்குப் பலர் ஆசைப்படுகின்றனர். அவர்கள் அனைவரிடமும் வாக்குறுதிகளை நாம் கேட்டுள்ளோம். நாங்கள் சந்திரனில் இருந்து அரிசி கொண்டுவருவோம் என்றும் 1994 இல் 6 மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட மக்கள் ஆவோம். வேட்பாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லாமல் வெறுக்கத்தக்க வகையில் அவற்றை வழங்குவதற்கு மாத்திரம் பழகிவிட்டனர். தற்போது மூன்று முக்கிய வேட்பாளர்கள் ஊழலை தீர்க்கமாக கையாள்வார்கள் என்று வாக்காளர்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழலுக்கு எதிராக வினைத்திறனான சட்டம் ஒன்றினை நிறைவேற்றியதாக பெருமையாகச் சொல்கின்றார். அப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட்டு நமது சட்டப் புத்தகங்களில் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அது அங்கே மாத்திரமே காணப்படும்! கண்துடைப்பாக கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைத் தவிர, அறியப்பட்ட எந்தவொரு ஊழல் நடவடிக்கைகளுக்கும் எதிராக ஒரு வழக்கும் இன்னமும் தொடரப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்திருக்கும் அரசியல் கட்சியானது, நாட்டின் மிகப் பெரிய மோசடியாளர்களை உள்ளடக்கியதாக அறியப்படுகிறது. அதனால்தான் அவர்கள் மக்களால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இன்னும் அவர்களில் யாரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஜனாதிபதி பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழலுக்கு எதிராக ஒரு விரலைக் கூட உயர்த்துவார் என்பதை இதுவும் அவரது நீண்ட கால சாதனைகளும் நாட்டுக்கு தெரிவிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பழைய ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பகுதியானோரை அவரது கட்சிக்குள் கொண்டவர். அவர்களில் பலர் அனுபவமிக்க அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஊழலுக்கும் பெயர் பெற்றவர்கள். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நலன்களுக்கு முரண்படாமல் ஒரு சுதந்திரமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை அமைப்பதாக அவர் உறுதியளித்திருந்தாலும், மக்கள் அவரது வாக்குறுதிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியுமா? NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, பல அரசியல்வாதிகளின் ஊழல் ஒப்பந்தங்கள் பற்றிய பல கோப்புகள் எனக் கூறப்பட்ட கோப்புக்களை அண்மைய காலங்களில் நாட்டுக்குக் காட்டினார். எனினும் அந்த கோப்புகள் என்ன என்பதை அவர் இன்றுவரை நாட்டுக்கு தெரிவிக்கவில்லை. அவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல் ஒழிந்துவிடும் என்று நாடு நம்ப முடியுமா?

ஊழலை ஒழிப்பதாக அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் இந்த நபர்கள் தீவிரமாக இருந்தால், பொது வெளியில் இந்த பிரச்சினைகள் குறித்து கடுமையான கேள்விகளை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பார்களா? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், வாக்காளர்களை தெளிவுபடுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் பொது நிகழ்ச்சி ஒன்றினை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். அத்தகைய மன்றத்தில் பங்கேற்க தங்கள் விருப்பத்தை பகிரங்கமாக அறிவிக்குமாறு அனைத்து தீவிர ஜனாதிபதி தேர்தலின் போட்டியாளர்களையும் நாம் அழைத்து நிற்கின்றோம். தொடர்ந்து அவர்கள் பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வார்கள் என்பது தொடர்பான கேள்விகளை அவர்களிடம் இருந்து தெளிவுபடுத்தவும்; ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலனுக்காக IMF மற்றும் மற்றவர்களுடன் எப்படி அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்; நாட்டிற்கு மிகப் பெரிய வருமானம் ஈட்டுபவர்கள் – பெருந்தோட்டங்கள், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாட்டில் பணிப்பெண்களாக பணிபுரியும் பெண்கள் – எப்படி அதிகாரமளிக்கப்படுவார்கள் மற்றும் முடிவெடுப்பதிலும் நிர்வாகத்திலும் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்குவார்கள் போன்றவற்றுக்கு விடைகாண அந்த மன்றத்தைப் பயன்படுத்தலாம். அவர்கள் ஆளுகை தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளிக்கலாம் – நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை – அவர்கள் மூவரும் பல்வேறு காலகட்டங்களில் அதை ஒழிப்பதாக உறுதியளித்தனர் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நாடு எதிர்கொண்டுள்ள மிகவும் சிக்கலான பிரச்சினைக்கு பல்வேறு உள்ளாட்சிகள் மற்றும் மாகாணங்களின் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினை வழங்குவதன் மூலம் தீர்வு காண்பதற்கும் உண்மையான குடியரசாக மாறுவதற்குமான கேள்விகளுக்கு அவர்கள் பதில் வழங்க வேண்டும் – என்றுள்ளது.

 

 

 

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles