காணொளியை பார்க்க…..
https://www.facebook.com/share/v/1suzDqWzA7ppzJ5v/?mibextid=oFDknk
முல்லைத்தீவு – இரணைப்பாலையில் அமைந்துள்ள மரக்காலையின் உரிமையாளர் மீது மரக்காலையில் பணிபுரியும் இளைஞன் ஒருவரால் தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் பணிபுரியும் ஊழியரால் மரக்காலை உரிமையாளர் மீது நேற்று (28) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மல்லிகைத்தீவினை சேர்ந்த மரக்காலை உரிமையாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் மரக்காலை உரிமையாளர் குறித்த இளைஞனை இரவு வேளை வேலை செய்யுமாறு கூறியிருக்கின்றார். அப்போது குறித்த இளைஞன் தன்னால் வேலை செய்யமுடியாது என கூறியுள்ளார். அதற்கு உரிமையாளர் குறித்த இளைஞனை வெளியில் போகுமாறு அனுப்பியுள்ளார். பின்னர் குறித்த இளைஞன் அதிகாலை மரக்காலைக்குள் மதுபோதையில் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த உரிமையாளர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்த ஏனையவர்களை எழுப்பி உரிமையாளரை தாக்கிவிட்டேன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் என சொல்லிவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதனையடுத்து பொலிஸ் குழுவினரால் குறித்த நபரை தாக்கிவிட்டு தப்பித்து சென்ற போது சிலாவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனாவார். இவருக்கு உடந்தையாக இருந்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் தேடி வருவதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.

