28.9 C
Colombo
Saturday, October 10, 2026

தனித்தனியாக சிகரட் விற்பதை தடைசெய்ய கோரிக்கை!

மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் தனித்தனியாக சிகரட் விற்பனை செய்வதை அரசு தடைசெய்ய வேண்டும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சம்பத் டி சேரம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில், பன்னாட்டு புகையிலை நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சிகரட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கு அரசு உடனடியாக தலையிட வேண்டும்.

உலகத்தில் மரணங்கள் ஏற்படுவதற்கு தொற்றா நோய்கள் ஒரு பிரதான காரணமாகும். இலங்கையில் 83 வீத மரணங்கள் தொற்றாத நோய்களால் ஏற்படுகின்றன. தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு பிரதான 4 காரணிகள் உள்ளன, அவற்றுள் முதன்மை காரணியாக புகைத்தல் பாவனையாகும்.

சிகரட் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களின் பயன்பாடு தனிநபர்களின் மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும்; கட்டுப்படுத்தும் ஒரு போதைப்பொருளாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, புகையிலை பாவனையால் உலகளவில் வருடாந்தம் சுமார் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும், இலங்கையில் தினமும் 50 பேர் அகால மரணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையர்கள் நாளொன்றுக்கு 520 மில்லியன் ரூபாவை (52 கோடி) சிகரெட் பாவனைக்காக செலவிடுகின்றனர்.

தற்போது இலங்கையில் சிகரட் பாவனை வெகுவாக குறைந்துள்ளது. GATS கணக்கெடுப்பின்படி (Global Adult Tobacco Survey 2020) இலங்கையில் சிகரட் பாவனை 9.1 வீதமாக குறைந்துள்ளது. இலங்கையில் சிகரட் பாவனை குறைவடைந்து வருகின்ற போதிலும், இன்னமும் எமது நாட்டில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரட் பாவனை செய்கின்றனர். சிகரெட் பயன்பாடு ஒரு நாட்டில் சுகாதார பிரச்சினைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், சிகரட் பாவனையினால் காற்று, நீர் மற்றும் நிலம் மாசுபடுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

எமது நாட்டில் குறைந்து வரும் சிகரட் பாவனையை மேலும் குறைப்பதற்காக, மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான அதிகார சபை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய சில திருத்தங்கள் தொடர்பில் பல வருடங்களாக முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த முன்மொழிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது வேதனையான நிலையே.

எனினும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மக்களுக்கு பயனளிக்கக்கூடிய சில பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தி, மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்,

01. தனி சிகரட் விற்பனை தடை

இலங்கையில் விற்கப்படும் சிகரட்டுகளில் 93.6 வீதமான சிகரட்டுக்கள் தனி சிகரட்டுக்களாகவே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலைமையானது, சிகரட்டின் பாவனையைக் குறைக்கும் செயல்முறையைத் தடுக்கிறது, மேலும் உலகில் 107 நாடுகள் ஒற்றை சிகரட் விற்பனையைத் தடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இலங்கையில் இன்னும் தனித்தனியாக சிகரட் விற்பனை செய்யப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமே. தனி சிகரட் விற்பனையை தடை செய்வதன் மூலம், சிகரட்டை கொள்வனவு செய்யும் சக்தி குறைந்து, அதன் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சிகரெட் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. மேலும், தனிப்பட்ட விற்பனையைத் தடைசெய்வது, சிகரட் பெட்டிகளில் உள்ள எச்சரிக்கை தகவல்களின் பயன்பாட்டையும், அவற்றை பயன்படுத்துவோர் பார்க்கும் அளவையும் அதிகரிக்கிறது, இவ் எச்சரிக்கை தகவலின் மூலம் சிகரட் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புக்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலம் சிகரட்டின் மீதுள்ள கவர்ச்சியைக் குறைக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சிகரட் பாவனையை ஊக்கப்படுத்துவதற்கான மிகச் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று தனி சிகரட் விற்பனையைத் தடை செய்யவது என பரிந்துரைக்கிறது. உலகில் வல்லரசு நாடுகளின் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் பயனுள்ள கொள்கைகள் எமது நாட்டில்; புகையிலை நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாக் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் வருத்தமான நிலை.

02. சிகரட்டிலுள்ள வடிகட்டிகளை (filter) ஐ தடை செய்தல்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (WHO FCTC) 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. கடந்த 10.02.2024 அன்று நடைபெற்ற புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்சிகளின் 10வது மாநாடு  பனாமாவில் நடைபெற்றது. அந்த மாநாட்டில், புகையிலை கட்டுப்பாட்டு சாசனத்தின் பிரிவு 18இனை (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) செயல்படுத்துவது குறித்து ஒரு முக்கிய முடிவு எட்டப்பட்டது, இது சிகரட்டில் வடிகட்டிகள் மற்றும் ஆவியாக்கிகளை தடை செய்ய முன்மொழியப்பட்டது.

சிகரட் வடிகட்டிகள் சுற்றுச்சூழலில் 7,000 க்கும் மேற்பட்ட இரசாயனங்களை வெளியிடுகின்றன மற்றும் நிலம் மற்றும் நீர் உட்பட அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் கடுமையான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையில் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் சிகரெட் வடிகட்டிகள் சுற்றுச்சூழலுடன் இணைகின்றன, வருடத்திற்கு 2300 மில்லியன் சிகரெட் வடிகட்டிகள் சுற்றுச்சூழலுடன் இணைகின்றன.
இந்த சிகரட் வடிகட்டிகள் புகைபிடிப்பதால், புகைத்தலால் ஏற்படும் விளைவுகளை குறைத்துக்கொள்ளலாம் என்று புகையிலை தொழில்துறையினர் ஒரு கருத்தை உருவாக்கியுள்ளனர், ஆனால் இக்கருத்து உண்மையல்ல என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட் வடிகட்டிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை மற்றும் புற்றுநோய்கள் மற்றும் கன உலோகங்கள் நிறைந்தவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து காரணிகளையும் கவனத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் சிகரெட் வடிகட்டிகளை தடை செய்ய ஒப்புக்கொண்டது, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகியவை ஏற்கனவே சிகரெட் வடிகட்டிகளை தடை செய்துள்ளன.இவ்வாறான பயனுள்ள முன்மொழிவுகளை இலங்கையில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பன்னாட்டு புகையிலை நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றாமல், சிகரட் பாவனையை குறைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிட்ட வேண்டும். இன்னும் சிகரட் புகைப்வர்களை பாவனையிலிருந்து விடுவித்து, சிகரெட்டினால் ஏற்படும் பொருளாதார, சுகாதார மற்றும் சமூக பாதிப்புகளை குறைப்பதற்கு முன்வர வேண்டும் – என்றுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles