வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் ஆரம்பித்த 7ம் ஆண்டு நினைவு நாளையோட்டி எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில் பேரணியொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் செவ்வாய்க்கிழமை (20) காலை 9:30 ஆரம்பமாகவுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திக்குறிப்பில்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் வலி நிறைந்த ஏழு ஆண்டுகளைக் கடந்து வரும் 20.02.2024 இல் எட்டாவது ஆண்டில் கால் பதிக்கிறது.
இந்த போராட்டத்தில் நாம் அனுபவித்த வலிகள், இடையூறுகள், தடைகள் ஏராளம். எனினும் இதுவரை காலமும் தாங்கள் எமக்களித்த ஆதரவும் ஊக்கமுமே எம்மை மனவலிமையுடன் போராட வைத்தன. எனவே கடந்த வருடங்களி்ல் போன்று இந்த வருடமும்இந்நாளை அடையாளப்படுத்தும் முகமாக ஓரு பேரணி 20.02.24 அன்று கந்தசாமி கோயில் முன்றலில் தொடங்கி கிளிநொச்சி டிப்போ சந்தி வரை நடைபெறும்.
இந்த பேரணியில் கலந்து எமக்கு ஊக்கமளிப்பதுடன் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் எங்கள் முயற்சியிலும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் – என்றுள்ளது.

