புத்தர் தொடர்பான கிறிஸ்தவ மத சபையின் தலைவர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்(CID) தலைவருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெரோம், புத்தருக்கு கூட இயேசு தேவை என்று கூறி, புத்தபெருமானை இழிவுபடுத்தும் வகையில், சமீபத்தில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டதாக, லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் போதகர்களின் அறிக்கைகள் குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டன, அங்கு ஜனாதிபதியிடம் இத்தகைய கருத்துக்கள் நாட்டில் இனவாத பதட்டத்திற்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க எந்தவொரு நபருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், மத நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, போதகரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிரேஷ்ட பாதுகாப்புத் தரப்புகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதையடுத்து, உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவரிடம் விசாரணைகளை ஒப்படைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழுவை நியமித்து விரிவான விசாரணையை தொடங்குமாறு சிஐடியிடம் கோரப்பட்டுள்ளது.
மத போதகர் ஜெரோம் புத்தரைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் காணொளி, வார இறுதியில் சமூக ஊடகங்களில் பரவி, நாட்டில் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

