28.9 C
Colombo
Friday, August 21, 2026

மூன்று இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையானது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

மேலும், நான்கு படகுகளுக்கான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் 17 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

படகுரிமை வழக்கிற்காக இராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கொண்ட குழு நேற்று மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

படகுகளுக்கான உரிமை கோரும் மூன்று வழக்குகளில் உரிமையாளர்கள் முன்னிலையாகாததால், மூன்று படகுகளும் அரசுடைமையாக்கப்படுவதாக ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

2021 டிசம்பர் மாதம் கைப்பற்றப்பட்ட குறித்த படகுகள் தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போதும், படகு உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

மேலும் நான்கு படகுகளுக்கான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவற்றின் உரிமையாளர்கள் மன்றில் ஆஜராகினர்.

வழக்கின் சாட்சியாளர்களிடம் நேற்று மன்றில் சாட்சியம் பெறப்பட்டதுடன், சாட்சியினை சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோசன் மன்றில் நெறிப்படுத்தினார்.

சாட்சியங்களை ஆராய்ந்த நீதவான் குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மன்றில் முன்னிலையாகியிருந்த நான்கு படகுகளின் உரிமையாளர்களின் வழக்கு ஜனவரி 31 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் படகின் உரிமையாளர்களை மன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles