யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பொலிஸார் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு திடிரென வந்திருந்த கோப்பாய் பொலிஸார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டிருந்தனர்.
குறிப்பாக ஒலிபெருக்கிகளை பாவிக்க முடியாது என்றும் ஒலிபெருக்கிகளை கழற்றுமாறும் பொலிஸ் நிலையம் வந்து ஒலிபெருக்கி பாவிக்க அனுமதி எடுக்குமாறும் கூறியிருந்தனர்.
இதன் போது தாம் பல்கலைக்கழகத்திற்குள்ளே தான் ஒலிபெருக்கி பாவிப்பதாகவும் இதற்கான அனுமதி எடுக்க வேண்டுமாயின் உடன் அனுமதி தருவீர்களா என பொலிஸாரிடம் போராட்டகாரர்கள் கேட்டிருந்தனர்.
ஆனாலும் பொலிஸ் நிலையம் வந்து பொறுப்பு அதிகாரியிடம் கதைக்குமாறு பொலிஸார் கூறியிருந்தனர். சில தினங்களிற்கு முன்னர் தியாக தீபம் நினைவிடத்தில் பாவித்த ஒலிபெருக்கிகளை இதே பொலிஸார் தான் கழற்றிச் சென்றது மட்டுமல்லாது பல தடவைகள் கேட்டும் அந்த ஒலிபெருக்கிகளை இதுவரை வழங்கவும் இல்லை. அதற்கான அனுமதியும் இதுவரை கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு போராட்டகாரர்கள் கூறிய போதிலும் அங்கு போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்த பொலிஸார் உடனடியாக ஒலி பெருக்கிகளை கழற்றுமாறும் கூறியதால் பெரும் முரண்பாடு ஏற்பட்டது.
இவ்வாறாக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதால் பல்கலைக் கழக போராட்டத்தில் சிறிது குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்ட நிலையில் தொடர்ச்சியாக உணவுத் தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

