28.9 C
Colombo
Friday, August 21, 2026

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு திடீர் இடமாற்றம் – அரசியல் பழிவாங்கல் காரணமா?

வடக்கு மாகாண  விவசாய அமைச்சின் செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநரால் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் ஒன்றை இரத்துச் செய்யுமாறு வடக்கு ஆளுநர் கோரியிருந்த நிலையில் அதற்கு விவசாய அமைச்சின் செயலாளர் மறுத்ததன் காரணமாக, அவருக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மன்னார் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றிவந்த தொழிலாளி ஒருவருக்கும் பொறியியலாளருக்கும் இடையில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்திருந்த முரண்பாடு கைகலப்பில் முடிவடைந்து இருவரும் காயங்களுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகின்றது.இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் குறித்த தொழிலாளி மற்றும் பொறியியலாளருக்கு திணைக்களமட்ட விசாரணை முடியும்வரை அமைச்சின் செயலாளரினால் தற்காலிக இடமாற்றங்கள் வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் தனது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி குறித்த தொழிலாளி மன்னார் நீதிமன்றில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ததோடு வடக்கு மாகாண ஆளுநரிடத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த தொழிலாளி வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏற்கனவே நெருக்கமானவராக கூறப்படும் நிலையில் விவசாய அமைச்சின் செயலாளரை அழைத்த ஆளுநர் தொழிலாளியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியுள்ளார்.

நீதிமன்றிலும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதால் விசாரணை முடிவடையும் வரை இடமாற்றத்தை இரத்துச் செய்ய மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மறுத்திருந்த நிலையிலேயே இன்று மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு இடமாற்ற கடிதம் வடக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் மீளப்பெறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles