தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கூடி நேற்றையதினம் கலந்துரையாடலில் ஈடுபட்டது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் போட்டியிடுகின்ற நிலையில் அவரை ஆதரித்து முன்னெடுக்கப்பட உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் , தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து வருகின்ற அழைப்புகள் தொடர்பாக என்ன முடிவெடுப்பது என்று ஆராயப்பட்டது. எந்த முடிவை எடுத்தாலும் ஒருமித்து முடிவு எடுப்பது என்று இறுதியில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தென்னிலங்கை வேட்பாளர்களின் அழைப்புகளை ஏற்பது என்றால் ஒட்டுமொத்த கட்டமைப்பும் அதை ஏற்றுக்கொண்டு செல்வது. இல்லை என்றால் ஒட்டுமொத்த கட்டமைப்பாக அந்த அழைப்பை ஏற்காமல் விடுவது. அதற்கு பொருத்தமான பதிலை வழங்குவது. ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரையிலும் இந்த நிலைப்பாட்டைப் பேணுவது என்று பொதுக் கட்டமைப்பாக முடிவெடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் பொதுச் சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

