அரச – தனியார் பங்குடமை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திங்கட்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே குறித்த தீர்மானத்திற்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய தேவை 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய, கீழ்க்காணும் வகையில் புதிய முதலீட்டு வலயத்தை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
• வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் தென்மாகாணத்தில் புதிய முதலீட்டு வலயத்தை அமைத்தல்
• மாங்குளம், பரந்தன் இரசாயனக் கம்பனி வளாகம் மற்றும் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபன வளாகத்தில் புதிய முதலீட்டு வலயங்களை அமைத்தல்
• இரணவில மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களில் புதிய முதலீட்டு வலயங்களை அமைத்தல்
• பிங்கிரிய மற்றும் அம்பாந்தோட்டை முதலீட்டு வலயங்களை மேலும் விரிவாக்கம் செய்தல்
உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார வலயங்களை அமைப்பதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொருத்தமான அரச – தனியார் பங்குடமை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, குறித்த முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

