கடற்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 13 தமிழக மீனவர்களும் குறித்த குற்றச்சாட்டில் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி இரண்டு படகுகளுடன் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த படகின் உரிமையாளர் உள்ளிட்ட 13 மீனவர்கள், 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனையுடன் கடந்த 22 ஆம் திகதி விடுவிக்கப்பட்டனர்.
எனினும் கைது நடவடிக்கையின் போது மீனவர்களால் தாக்கப்பட்டு இலங்கை கடற்படையினர் மூவர் காயமடைந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் அவர்களை டிசம்பர் 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
13 தமிழக மீனவர்கள் தொடர்பான குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சாதாரண சிறைத்தண்டனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய 12 மீனவர்களுக்கு எதிரான வழக்கில், படகின் உரிமையாளரையும் குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இணைத்து, சந்தேகநபருக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் விளக்கத்தை வழங்க வேண்டியிருப்பதன் காரணமாக அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீரியல்வளத்துறை திணைக்களத்தினரால் மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

