28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு பெரும் தட்டுப்பாடு! -குருதிக்கொடை செய்ய அவசர அழைப்பு-

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குருதிக்கொடையாளர்கள் விரைந்து வந்து குருதிக்கொடை செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை இரத்தவங்கி வைத்தியர் எம். கிருஷ்ணபிள்ளை விடுத்துள்ள அறிவிப்பில்,

இன்றைய தினம் யாழ் இரத்த வங்கியில் 318 பைந்த் குருதியே கையிலிருப்பில் உள்ளது.
ஒரு நாளில் அண்ணளவாக
30- 40 பைந்த் குருதி யாழ் வைத்தியசாலை நோயாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

அது மட்டுமன்றி, முல்லைத்தீவு, பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளும் எம்மில் தங்கியிருக்கின்றன.

இன்னும் ஒரு கிழமை கூட எம்மால் முழுமையாகத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இன்றும் நாளையும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம்கள் கோவிட் – 19 நோயாளர்கள் இனங்காணப்பட்ட காரணத்தால் திடீரென இரத்தாகியுள்ளன.

இனி 15ஆம் திகதி வரை எந்த ஒரு இரத்ததான முகாம்களும் இல்லை. அதன் பின்னர் இருப்பவையும் நடக்குமா என நிச்சயமற்ற ஒரு நிலை.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் அவசர நிலையில் உள்ளன. இரத்தம் கொடுக்காவிடின் இறந்து விடுவார்கள் எனக் கருதும் நோயாளர்களுக்குக் கூட எண்ணி எண்ணிக் கொடுக்க வேண்டிய நிலை.

வேறு எந்த இரத்தவங்கியில் இருந்தும் கடன் பெற முடியாதபடி ஒட்டுமொத்த குருதிமாற்றுச் சேவையும் கையறு நிலையிலிருக்கின்றன.

நீங்கள் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த நிலையிலிருந்து எம்மால் மீளமுடியும்.
இன்று உங்கள் அருகிலுள்ள இரத்த வங்கிக்குச் சென்று நீங்கள் செலவளிக்கும் 15 நிமிடங்கள் இறக்கும் தறுவாயில் இருக்கும் நோயாளர்களின் உயிர்களைக் காத்து மீண்டும் அவர்களுக்கு வாழ்க்கையளிக்கக்கூடியது.

நீங்கள குருதிக் கொடையாளர் என்றால், உங்கள் குடும்பத்தவர் மற்றும் நண்பர்களையும் இரத்ததானம் செய்ய ஊக்குவியுங்கள். உங்கள் பங்களிப்பை மிகுந்த எதிர்பார்ப்புடன் வேண்டி நிற்கின்றோம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles