24.5 C
Colombo
Friday, October 9, 2026

இயற்கையினுடைய நீதி எப்போதும் எங்கள் பக்கம் இருக்கின்றது – புதிய சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்!

கிஷோருக்கு நீதிமன்றத்தால் நீதி நிலைநாட்டப்படுகின்ற சந்தர்ப்பத்திலே நிச்சயமாக இந்த பதவியை விட்டுக் கொடுப்பேன். அதுவரைக்கும் நான் இந்தப் பதவியில் தொடர்வேன். இயற்கையினுடைய நீதி எப்போதும் எங்கள் பக்கம் இருக்கின்றது என சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக தெரிவான முத்துலிங்கம் கோகுலராஜ் கருத்து தெரிவித்தார்.

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,எங்களுடைய ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியினுடைய உறுப்பினர், முன்னாள் உபதவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோருடைய பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உபதவிசாளர் தெரிவு இடம்பெற்றிருக்கின்றது.

பதவி பறிக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதித்துறையிலே முழுமையான நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. நீதிமன்றத்தால் நிச்சயமாக நல்லதொரு நீதியான ஒரு தீர்ப்பு கிடைக்கும் என்பதை நாங்கள் இந்த நிமிடம் வரை நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையிலே இந்த உபதவிசாளர் தெரிவிற்கு நாங்கள் போட்டியிட்டதற்கான முதல் காரணம் என்னவென்று சொன்னால், சட்டரீதியாக உள்ளூராட்சி ஆணையாளரால் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. உபதவிசாளர் தெரிவு இடம்பெறுகின்றது. நாங்கள் போட்டியிடாவிட்டாலும் இன்னுமொரு தரப்பினர் வந்து போட்டியிட்டு அந்த உபதவிசாளர் பதவியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்ற வகையிலே நாங்கள் இதிலே போட்டியிட்டிருக்கின்றோம்.

நிச்சயமாக நீதிமன்றத்தால் அவருக்குரிய அந்தத் தீர்ப்பு கிடைத்து, அவருக்கு நீதி நிலைநாட்டப்படுகின்ற சந்தர்ப்பத்தில், நான் எனது இந்த உபதவிசாளர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்து, அவருக்கு மீண்டும் உபதவிசாளர் பதவியை வழங்குவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு, ஏற்பாடுகளுக்கு விட்டுக்கொடுப்போம் என்பதிலே எந்தவொரு ஐயமும் இல்லை. அதுவரைக்கும் நான் இந்தப் பதவியிலே தொடர்வேன். இயற்கையினுடைய நீதி எப்போதும் எங்கள் பக்கம் இருக்கின்றது என்பதை நாங்கள் இந்த மக்களுக்கு மீண்டும் சுட்டிக்காட்டுகின்றோம்.

அதேபோல தொடர்ந்து இனிவரும் காலங்களிலே வந்து மிகவும் சிறப்பாக இந்தச் சபை திறம்பட இயங்குவதற்கு என்னாலான ஒத்துழைப்புகளை நான் வழங்குவேன்- என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles