25 C
Colombo
Thursday, October 8, 2026

வடக்கு மாகாணத்தில் சிறுதானிய உற்பத்தியில் விதைகளுக்கு மாத்திரம் 27 மில்லியன் ஒதுக்கீடு!

வடக்கு மாகாணத்தில் சிறுதானிய உற்பத்தியில் விதைகளுக்கு மாத்திரம் 27 மில்லியன் ரூபாய் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சு.செந்தில்குமரன்,1800 ஏக்கரில் சிறுதானியங்களை பயிரிட முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றபோது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
பெரும்போக நெல் அறுவடைக்குப் பின்னர் சிறுதானிய பயிற்சிச் செய்கையை ஊக்குவிக்கும் முகமான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்

அந்த வகையில் ஆளுநர் பிரதம செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் அதற்கான நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டுள்ளோம்

பெரும் போக நெல் பயிர் செய்கைக்கு பின்னர் சிறுபோகம் வரை வேறு பயிர் செய்கையை மேற்கொள்வது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

நெற் பயிர் செய்கை மூலம் கிடைக்கின்ற வருமானம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் அவர்களின் வருமானத்தை பெருக்கும் வகையில் பெரும் போக நெல் அறுவடையை தொடர்ந்து வயலில் காணப்படும் எஞ்சியுள்ள நீரை பயன்படுத்தி மிகக் குறைந்த உற்பத்திச் செலவில் அதிக விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டும்முகமாக சிறுதானிய பயிர் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உழுந்து, பயறு, கௌபி, நிலக்கடலை போன்ற விதைகளை மானிய அடிப்படையில் வழங்குவதுடன் உற்பத்திக்கான இயந்திரங்களையும் மானிய அடிப்படையில் வழங்குவதாக இருக்கின்றோம்.கால்நடைகளை கட்டுப்படுத்தும் முகமாக முட்கம்பி வேலிகளை அமைப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுக்கவுள்ளோம்.

வயல் நிலங்களில் சிறுதானிய உற்பத்திக்கு, விதைகளுக்கு மாத்திரம் 27 மில்லியன் ரூபாய் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 1800 ஏக்கரில் தானியங்களை பயிரிட முடியும்

பாரம்பரியமான வரகு, சாமை, குரக்கன், கம்பு ஆகியவற்றின் பயன்பாடு குறைந்து வருகிறது ஆகவே அவற்றின் உற்பத்தியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்கான விதைகளை வழங்கவும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் நாங்கள் உரிய நடவடிக்கையை
மேற்கொண்டிருக்கின்றோம். விவசாயிகள் இதனை விற்பனை செய்வதற்கு பிரச்சினைகள் இருக்குமோ? என யோசிக்காமல் உற்பத்திகளை மேற்கொள்ள தயாராக வேண்டும்.

மத்திய விவசாயத் திணைக்களத்தில் இருந்து தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் சிறுதானிய பயிர் செய்கையை ஓரளவுக்கு மேற்கொண்டோம். 9.6 மில்லியன் ஒதுக்கப்பட்டு கடந்த வருடம் கிளிநொச்சியில் சிறுதானிய பயிர் செய்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும் போக அறுவடையை தொடர்ந்து மாசி மாதமளவில் சிறு தானிய பயிர் செய்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று அனுமதி வரும்போது பயிர் செய்கை காலம் கடந்து விடும். இம்முறை எமது வேண்டுகோளுக்கமைய பிரதம செயலாளர் பயிர் செய்கையை மேற்கொள்வதற்கான அனுமதியை நமக்கு பெற்றுத்தந்துள்ளார்கள்.

ஆகவே யாழ் மாவட்டத்தில் ஏறக்குறைய 500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானிய பயிர் செய்கையை மேற்கொள்ளலாம் என இருக்கின்றோம்.

மாவட்டச் செயலாளரின் நிதி ஒதுக்கீட்டில் மேலும் 400 ஏக்கர் நிலப்பரப்புக்கான விதைகளை பெற்றுக் கொள்வதற்காக இருக்கிறோம். இம்முறை யாழ் மாவட்டத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய பயிர் செய்கையை வெற்றிகரமாக மேற்கொள்ள கூடியதாக இருக்கும்.

இதற்காக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியன தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்திருக்கின்றார்கள்.

சிறுதானியத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி அவர்களை வறுமை கோட்டில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்ல நாம் வழிசெய்யவுள்ளோம் – என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில், வடக்கு மாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் எஸ்.அஞ்சனாதேவி, வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.வசீகரன், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் த.ராஜகோபு, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் ந.திருலிங்கநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles