ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கத்தின் (குழந்தை) இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றது.
வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்படிருந்த அன்னார் தனது 93 வயதில் கடந்த 17ஆம் திகதி உயிரிழந்ததார்.

அன்னாரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிகிரியைகள் இடம்பெற்றது.அதனை தொடர்ந்து திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
நுற்றுக்கு மேற்பட்ட சுயஆக்க நாடகங்களையும் அறுபதிற்கு மேற்பட்ட மொழிபெர்ப்பு நாடகங்களையும் தமிழ்நாடக உலகிற்கு தந்த பேராளுமை. அன்னாரது ஆற்றலும் ஆளுமையுமே நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்துறை தமிழில் வளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது.
ஆசிரியராகப்பணியாற்றி ஓய்வு பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையை உருவாக்குவதில் பேராசிரியர் கா.சிவதம்பியுடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

