27.8 C
Colombo
Friday, August 21, 2026

மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம்!

நடைபெற்று முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் ஆதரித்து பணியாற்றினோம். அவர்கள் அந்த கொள்கை திட்டத்தை மீறி செயல்படுகின்ற போது விமர்சிக்க உரிமையும் உள்ளவர்களாகவும் நாம் இருப்போம் என மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அதன்பின்னர் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இதனை தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற பொறியாளர் மயில்வாகனம் சூரியசேகரம்,

மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம் என்பது இலங்கை மத்தியில் உருவான மக்கள் இயக்கமாகும். யாழ்ப்பாணத்தில் இந்த இயக்கத்தின் கிளையை இன்றைய தினம் ஸ்தாபித்திருக்கின்றோம். இதனுடைய நோக்கம் 76 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் இதுவரை நடைபெறாத ஒரு மாற்றம் நடைபெற்றிருக்கிறது. அந்த மாற்றத்தை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பித்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர முதல் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தார்கள். அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் ஆதரிக்கிறோம்.தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக இந்த ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்துவது என்பதை வற்புறுத்துவது எங்களுடைய பணியாக இருக்கும். அரசாங்கத்தை ஆதரித்து பேசுவது எமது நோக்கம் அல்ல. அவர்கள் இந்த கொள்கை திட்டத்தை மீறி செயல்படுகின்ற போது விமர்சிக்கவும் உரிமையும் உள்ளவர்களாகவும் நாம் இருப்போம். ஆக்கபூர்வமாக நாம் விமர்சனங்களை முன் வைப்போம்.

இதுவரை காலத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நமக்கு தெரியும். இவ்வளவு காலத்திற்கு பிறகு இவ்வாறான ஒரு மாற்றம் நடந்திருக்கின்றது. இதனை நாங்கள் காத்து பேணவேண்டும்.மேலும் அதனை வளர்த்து முழுவதாக நடைமுறைப்படுத்துவதற்கு செயற்படுவோம் – என்றார்.

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் ஜனா செல்வராஸ்,

மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம் என்பது வெறுமனே இயக்கமாக ஸ்தாபிக்கப்பட்டதல்ல. இதில் இருப்பவர்கள் பல்துறை சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். விரிவுரையாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ,பொறியியலாளர்கள், வைத்தியர்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்கள் இணைந்து மக்களினுடைய சேவைக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு இயக்கமாக இது காணப்படுகிறது. இதில் இருப்பவர்கள் பல ஆண்டு காலம் தொட்டு மக்களுக்காக பணியாற்றியவர்களாக இருக்கிறார்கள். பல்வேறு மக்கள் போராட்டங்களிலும், இயக்கங்களிலும் பணிகளை செய்தவர்களாக இருக்கிறார்கள்.

காலங்காலமாக இருந்து வந்த அரசியலில் இருக்கின்ற பிரபுத்துவ கலாசாரத்தையும் அதன் பின்னால் இருக்கின்ற ஊழலையும் அறிந்து கொண்ட பிறகு இவற்றை சமுதாயத்தில் இருந்து களைய வேண்டும் என்பதற்காக நீண்ட கால போராட்டங்களுக்கு பின்னர் ஒரு முடிவை நோக்கி பயணிப்பதற்காக குறித்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

அரகலய போராட்டத்தின் பின்னணியிலேயே நாங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்கி இருந்தாலும் கூட அது மக்கள் வேண்டிய ஒரு நிலையான ஒரு மாற்றமாக இருக்கவில்லை. ஆனால் அந்த சட்டபூர்வமான மாற்றமாகத்தான் கடந்த அரசியலிலே தேர்தலில் ஏற்பட்ட வெளிப்பாடுகளாக காணப்படுகிறது. இது மக்களின் எழுச்சி போராட்டங்களின் விடையாக பார்க்கின்றோம்.

அப்போதே இந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அமைப்பாக நிறுவப்பட்டது. அதன் பின்னர் நாம் நிறுவனமாக செயல்பட தொடங்கினோம். நாங்கள் இந்த மக்கள் அரசியலில் ஈடுபடும்போது அது நபரையோ ஒரு அரசாங்கத்தையோ எடுத்துச் செல்வதில் மட்டும் நின்று விடாது தொடர்ச்சியாக நாங்கள் எதற்காக வேண்டி செயல்பட்டோம், அது செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் அது சமூகத்திலே செயல்படுத்தப்படுகிறதா என்பதை பார்ப்பதற்காகவும் உந்து சக்தியாக செயற்படுவோம். தேசிய மக்கள் கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் மக்களுக்காக செயல்படுவோம்.

இந்தக் கொள்கைகள் செயல்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை மக்கள் சார்பாக முன்வைப்போம் – என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் எழுத்தாளர் கௌசல்ய குமாரசிங்க, ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றிய தலைவர் சிறீதரன் திருநாவுக்கரசு, சமாதான நீதிவான் மஹிந்தா ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles