அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று (02) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது .
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு வேண்டுகின்றேன் என லக்ஷ்மன் கிரியெல்லவினால் விடுமுறை முன்மொழியப்பட்டது.இதனை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார்.
இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் வெளியிட்டது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

