குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் E Passport சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக மீண்டும் வரிசைகள் அதிகரித்துள்ளன. அந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கொரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்வில் சித்தி பெறுபவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்ய உள்ளோம்.
புதிய அடையாள அட்டையை ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதையும் கூறவேண்டும். தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடாக, (Dangerous Drugs Control Board) போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக பாடசாலைகள் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த நாம் அனைவரும் ஆதரவு வழங்குகிறோம். இந்த நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்கவும், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வரவும் ஜனாதிபதியால் முடிந்தது. நிலைமையை புரிந்து கொண்டவர்கள் வேறொரு ஜனாதிபதியைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்பதே எமது கருத்தாகும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

