இந்தியா அரசாங்கத்தின் உதவி தேவையான சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள் யாழ் வணிகர் கழகத்தையோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தையோ தொடர்பு கொள்ள முடியும் என யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார்.
மார்கழி பெருவிழாவும் சிறிய நடுத்தர வர்த்தக உற்பத்தி விற்பனையாளர்களுக்கான கண்காட்சியையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,சிறிய நடுத்தர முயற்சியாளர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் வடக்கில் உள்ள உற்பத்தியாளர்களை ஏனையவர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காகவும் இந்த கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
வடக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இவர்கள் பங்களிப்பு முக்கியமானது இந்த முயற்சியாளர்களை அடுத்த கட்டத்திற்கு தமது பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற ஒழுங்கமைப்புகளை செய்வதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்.
இந்தியாவின் உதவி தேவையானவர்கள் யாழ் வணிகர் கழகத்தையோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தையோ தொடர்பு கொள்ள முடியும். இந்த கண்காட்சியானது ஒவ்வொரு வருடமும் நடாத்துவதற்கு எண்ணியுள்ளோம் என்றார்.

