இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை சாரதி ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து சாரதிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் மட்டக்களப்பு சாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டுவந்த அனைத்து பகுதிக்குமான போக்குவரத்துகளும் தடைப்பட்டது.இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
நேற்று(18) மட்டக்களப்பு பிரதான பஸ்தரப்பு நிலையத்திலிருந்து அம்பிளாந்துறை நோக்கிச்சென்ற பஸின் சாரதி மீது கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தனியார் பஸ் நடத்துனர் உட்பட நான்கு பேர் இணைந்து இந்த தாக்குதல் நடாத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்ய வலியுறுத்துவதுடன் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள நஸ்டத்தினை குறித்த தாக்குதல் நடாத்திய பஸ் உரிமையாளரிடம் பெற்று வழங்கக்கோரியும் இன்று காலை முதல் மட்டக்களப்பு இ.போ.ச. சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தாவிட்டால் நாளைய தினம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்துச் சாலைகளையும் மூடி போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

