போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்தும் புதிய முறைமையை இலங்கை பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய முறையின் கீழ், போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரின் விபரங்களையும் ஊட்டுவதன் மூலம் பொலிஸாரால் கடந்தகால குற்றவியல் பதிவுகளை மீட்டெடுக்க முடியும்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய அனைத்து கைதுகளின் விவரங்களும் தரவு அமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தரவு அமைப்பின் உத்தியோகபூர்வ அறிமுகம் நேற்று வியாழக்கிழமை (14) பொலிஸ் தலைமையகத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் ஆகியோரின் பங்கேற்பில் இடம்பெற்றது.
மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு திட்டமிட்ட விசேட போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

