வடக்கில் இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மிக அண்மையிலே தமிழ் நாட்டிலே இருந்து நூற்றுக்கணக்கான ரோலர்கள் வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இது நேரடியாக தனியே மீன்பிடி அமைச்சருடன் கதைப்பது அல்ல. கொள்கை ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருக்கக்கூடிய உறவைக் கொண்டுதான் இவ்விடயத்தைச் செய்ய முடியும். ஆகவேதான் நாங்கள் மீண்டும் மீண்டும் இந்த உறவுகளை சரியாகக் கொண்டுவர வேண்டுமென்பதை கூறுகின்றோம். ஏனென்றால் இருபது முப்பது வருடங்களாக இவ்விடயம் பேசப்படுகின்றது. ஒன்றுமே நடக்கவில்லை.
தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் வருகின்றார்கள். அது நிச்சயமாக தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படாவிட்டால் எங்களுடைய கரையோரங்களில் வாழக்கூடிய மீனவ சமூகத்தினுடைய முழு வருமானமும் இல்லாமல்போகும். அவர்கள் ஒரு வறுமைக்கோட்டின்கீழ் செல்லக்கூடிய ஒரு நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது.
ஆகவே, அமைச்சர் தனியாக அல்ல, அமைச்சர் வேண்டுமென்றால் நாங்கள் கூட வருவோம். நாங்கள் நேரடியாகக் கதைத்து அதை நிச்சயமாக நிறுத்துவதற்கான முழுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதை நாங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் – என்றார்.
ஐ.நா.மனித உரிமைகள் விவகாரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தால் தமிழ் மக்களின் பிரச்சனைக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதனை செயற்படுத்த தவறின் சர்வதேசத்தின் அழுத்தத்தினை இலங்கை எதிர்கொள்ளநேரிடும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஒரு சர்வதேச பிரச்சினையாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தால் எடுக்கப்பட்ட அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதைக் கவனிக்கவும் இல்லை. இப்படியாக சர்வதேசம் கூறுகின்ற விடயங்களையெல்லாம் நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டுதான் இந்த நாடு ஒரு மிகக் கஸ்டமான நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்யுங்கள் என்று சர்வதேசம் சொல்லியிருக்கின்றது.
இப்படியாக எங்களுடைய தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அதாவது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அவர்கள் தாங்களே தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக்கூடிய விதத்திலே ஒரு நியாயமான தீர்வைக் கொடுங்கள். இப்டியான நிலைமைகளை உருவாக்கினால்தான் சர்வதேச ரீதியிலே இந்த நாடு தலைநிமிர்ந்து நிற்கமுடியும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். அப்போதுதான் ஏனைய நாடுகளெல்லாம் இந்த நாட்டுக்கு உதவுவதற்கு முன்வருவார்கள். இதை மிகத் தெளிவாக உணர வேண்டும். இதை செய்ய வேண்டுமென்று கேட்டு முடிக்கின்றேன் – என்றார்.

