சித்திரவதை சம்பவங்களை எம் மக்கள் எதிர்கொள்வது இது முதல் தடவை அல்ல. சிறுவன் பாலச்சந்திரனுக்கும் அதுவே நடந்தது என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதிகோரி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இளைஞரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்திருக்கிறார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதுவரை எந்தவித நடவடிக்கையும் இது தொடர்பில் எடுக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. சாதாரண குடிமகனாக இருந்தால் இத்தனைக்கும் கைதுகள் நடந்திருக்கும். ஆனால் எந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்படவில்லை.
சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் நேற்று பேசியபோது கொழும்பிலிருந்து சுயாதீனமான குழு ஒன்று விசாரணை நடத்தும் என தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அங்கே இருக்கின்றவர்களே ஒரு குழுவாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக தெரிய வருகிறது.
இதில் எமக்கு நம்பிக்கை இல்லை. இது போன்ற பல கொடூரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படாமல் பிறிதொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டு நான்கு நாட்களாக கடுமையாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மரண விசாரணையின் போது இது இயற்கையான மரணம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. சித்திரவதை சம்பவங்களை எம் மக்கள் எதிர்கொள்வது இது முதல் தடவை அல்ல. சிறுவன் பாலச்சந்திரனுக்கும் அதுவே நடந்தது. இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகின்றோமா தெரியாது ஆகவே இது தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதி சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கிறேன்- என்றார்.

