மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய போது கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதும் பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நேற்றுக் காலை மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதி கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
போராட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வந்தாறுமூலை, களுவன்கேணி பகுதியில் இடைமறித்த சந்திவெளி பொலிஸார் அவர்களில் 6 பேரைக் கைது செய்தனர்.
இவர்கள் நேற்று மாலை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அன்வர் சதாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை, பெருந்தெருக்கள் சட்டத்தின் கீழ் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் மீது பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மாணவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான ஜெகன், கமலதாஸ், ரமனா, சதுர்திகா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இது தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி குறித்த மாணவர்களை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்தார்.வழக்கு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இதன்போது பிணையெடுப்பவர்களின் இருப்பிடத்தைக் கிராம சேவையாளர் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த உறுதிப்படுத்தலை பெறுவதற்கான நேரம் நீடித்த காரணத்தால் அந்த 6 மாணவர்களும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பெரும்பாலும் இன்றைய தினம் பிணையெடுப்பவர்களின் இருப்பிடத்தைக் கிராம சேவையாளர் உறுதிப்படுத்தி மாணவர்கள் ஆறு பேரும் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

