27.8 C
Colombo
Friday, August 21, 2026

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் எம்பி தன்னிலை விளக்கம்!

சிறுமி ஹிஷாலினியின் மரணம் என்னையும் எனது குடும்பத்தையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. 16 வயதை கடந்த பின்னரே ஹிஷாலினி எமது வீட்டிற்கு வந்தார். இணைந்த குளியல் அறையுடன் கூடிய 7×6 அடி அறை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போலவே அவரை கவனித்தோம்.

இவ்வாறு தனது வீட்டில் பணியாற்றிய நிலையில் மர்மமாக மரணித்த சிறுமி ஹிஷாலினி தொடர்பில் இன்று (5) நாடாளுமன்றில் ரிஷாட் பதியுதீன் எம்பி தெரிவித்தார். மேலும்,

ஹிஷாலினி எமது வீட்டுக்கு வந்த பின்னர் அவரது தாயார் ஒரு நாளும் ஹிஷாலினியை பார்ப்பதற்காக வரவில்லை. சம்பவ தினமன்று காலை 6.45 மணியளவில் ஹிஷாலினி தீப்பற்றிய நிலையில் அலறியுள்ளார். உடனே சத்தம் கேட்டு எனது மாமாவும் மாமியும் அந்த தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனாலும் முடியவில்லை, அருகில் இருந்த நீச்சல் தடாகத்தில் குதிக்குமாறு தெரிவித்துள்ளனர். தடாகத்தில் குதித்த சிறுமி குளிர் தண்ணீர் கேட்டார் அதனையும் கொடுத்தனர்.

தீயை அணைக்க 10-12 நிமிடங்கள் சென்றது. பின்னர் அம்புலன்சிற்கு 7.3 மணிக்கு அறிவித்து 7.33 மணிக்கு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இது வைத்தியசாலையின் பதிவேட்டில் உள்ளது. ஆனால் பொலிஸார் 8.35 மணிக்கே அனுமதித்ததாக நீதிமன்றில் கூறியதாக அறிகிறேன். சிறுஹிஷாலினி இறக்கும் நாள் வரையில் தினமும் எனது மனைவி அவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்று வந்தார். அவருடைய உடலில் பெரும் பகுதி பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் காப்பாற்றப்பட்டால் அதனை சரிசெய்ய அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டுமெனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக 7 – 10 இலட்சம் வரையில் செலவாகும் எனவும் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, எவ்வளவு ரூபா செலவானாலும் பரவாயில்லை எனவும் ஹிஷாலினி எமக்கு மீண்டும் தேவையெனவும் எனது மனைவி மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார். இவ்வாறு நாங்கள் ஒவ்வொரு நாளும் ஹிஷாலினியை குணப்படுத்துவது தொடர்பில், முயற்சித்து வந்தோம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

சிறுமி வைத்தியசாலையில் இருந்த நாள் வரையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு வந்து எனது மனைவியுடன் நல்லவிதமாக பேசி, ஊடகங்களுக்கு சரியான அறிக்கை விட்டார். அந்த தாயாரை அரசியல் வங்குரோத்துள்ள சிலரும் சில ஊடக விபச்சாரிகளும் தவறாக வழிநடத்தி கொடுமைப்படுத்தியதாக கூற வைக்கின்றனர். என் வீட்டில் எந்தவொரு அசிங்கங்களும் இடம்பெறவில்லை.

ஹிஷாலினி எமது வீட்டுக்கு பணிக்கு வந்தவுடன் அவரது பெற்றோருக்கு 40,000 ரூபா வழங்கப்பட்டது. பின்னர் அவர் பணியாற்றிய 7 1/2 மாத காலப்பகுதியில் 200,000 ரூபா வழங்கப்பட்டதோடு, அவர் இறந்ததன் பின்னர் 1 இலட்சத்து 50,000 ரூபாவும் அவரது குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

எந்தவொரு குற்றமும் செய்யாமல் எனது மனைவியும், மாமாவும், மைத்துனரும் விளக்கமறியலில் இருக்கிறார்கள். இன்னும் எனது பிள்ளைகள் இருவர் மாத்திரமே எஞ்சியிருக்கிறார்கள். அவரது மரணம் தொடர்பில் தூய்மையன விசாரணை நடைபெற வேண்டும். எந்த சந்தேகமும் இருக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles