புலனாய்வு பிரிவினர் என்று சிவில் உடையில் போலீசார் தமது சங்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இருவர்களது வீடுகளுக்கும் சென்று இவர்களை அச்சுறுத்துகின்ற வகையிலே கேள்விகளை கேட்கின்ற சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,கடந்த மாதம் 23ம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு கல்வி அமைச்சினால் இந்த மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஒரு விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றினை எமக்கு சமர்ப்பிப்பதாகவும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
எனினும் இன்று வரை இவ்வாறான ஒரு சம்பவத்தினை கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவில்லை.
புலனாய்வு பிரிவினர் என்று சிவில் உடையில் போலீசார் சென்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இருவர்களது வீடுகளுக்கும் சென்று அச்சுறுத்துகின்ற வகையிலே கேள்விகளை கேட்கின்ற சந்தர்ப்பங்கள் பதிவாகி இருக்கின்றது.
இது இந்த ஜனநாயக நாட்டிலே தங்களுடைய உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுக்கின்றவர்களை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள் என்கின்றவாறு அச்சுறுத்துகின்ற வகையிலே போலீசாரனுடைய இந்த செயல்பாடு அமைந்திருக்கின்றது.
சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கே இவ்வாறான நிலைமை எனில் பாமர மகன் ஒருவர் கைது செய்யப்பட்டால் எவ்வாறான இக்கட்டான நிலைக்கு அந்த சாதாரண மக்கள் தள்ளப்பட்டு இருப்பார்கள் என்கின்ற பிரச்சனை இங்கே எழுந்திருக்கின்றது என்றார்.

