25.6 C
Colombo
Wednesday, October 14, 2026

கிராஞ்சியில் கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் – அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!

கிராஞ்சி கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, உரிய ஆய்வுகளின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை இன்று (07) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

கிராஞ்சியில் கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

கடலட்டைப் பண்ணைகளுக்கு மேலும் 127 கிராஞ்சியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், விரைவில் பொருத்தமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அனைத்து தொழில் முறைகளும் சட்ட ரீதியானதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய கடற்றொழில் அமைச்சர், இலவன்குடா பகுதி உட்பட பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பட்டி வலைகள் உட்பட சில சட்ட விரோத தொழில் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், எனினும் அந்தத் தொழில் முறையை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் நலன் கருதி அவ்வாறான தொழில் முறைகள் தொடர்பாக நெகிழ்வுப் போக்குடன், தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, பூநகரி, கிராஞ்சி – இலவன்குடா பகுதியில் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், குறித்த பகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

கடலட்டைப் பண்ணைகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும், தமது தொழிலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பண்ணைகளை அமைக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், போட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை கோரிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோரிக்கைகளை ஆராய்ந்து நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவித்திருந்ததாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles