117ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி வீரர்கள் சகலதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவருவதால் மத்திய கல்லூரியின் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.
117 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின. போட்டிகள் 7,8,9 ஆம் திகதிகள் என மூன்று நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக நடைபெறுகின்றன.
நேசகுமார் எபனேசர் ஜெஷில் தலைமையிலான யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியும் நிசாந்தன் அஜய் தலைமையிலான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் களமிறங்குகின்றன.
போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை (07) காலை 9 மணியளவில் ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 56.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அணி சார்பில் சயந்தன் 55 ஓட்டங்களையும் நியூட்டன் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் பரியோவான் கல்லூரி சார்பில் கவிசன் 5 விக்கெட்டுகளையும், மாதுளன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
பதிலுக்கு தனது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி 70.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் முதல் இனிங்சில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி 71 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது. பரியோவான் கல்லூரி சார்பில் அணித்தலைவர் ஜெஷில் 52 ஓட்டங்களையும், அபியோசுவாந்த், சச்சின் கணபதி ஆகியோர் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி சார்பில் அபிலாஷ், முரளிதிசோன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு தனது இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்றபோது இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்தது. இதன்படி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஒரு விக்கெட் மீதமாகவுள்ள நிலையில் 69 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
அணி சார்பில் அஜய் 23 ஓட்டங்களையும், சிமில்டோன் 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் பரியோவான் கல்லூரி சார்பில் கஜகர்ணன், அசந்த் ஆகியோர் தலா இரு விக்ககட்டுகளை கைப்பற்றினார்கள்.
117ஆவது வடக்கின் பெரும் போர் போட்டியில் கடந்த இருநாட்களும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி வீரர்கள் சகலதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவருவதால் மத்திய கல்லூரியின் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இன்றைய தினம் தொடர்ச்சியாக போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

