சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் அழைப்பு மெய்வல்லுநராக பங்குபற்றிய இலங்கையின் முப்பாய்ச்சல் சம்பியன் கிரேஷான் தனஞ்சய அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் பங்குவற்றுவதற்காக பெண்களுக்கான நீளம் பாய்தல் சம்பியன் சாரங்கி டி சில்வா, தேசிய பயிற்றுநர் வை. கே. குலரட்ன ஆகியோருடன் கிரேஷான் தனஞ்சய சென்றிருந்தார்.
இலங்கை குழுவிலிருந்து கிரேஷான் தனஞ்சய கடந்த சனிக்கிழமை தலைமறைவாகி விட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
இது குறித்து இலங்கை மெய்வல்லுநர் நிறுவனத்தின் பொதுச் செயாலார் சமன் குமார குணவர்தனவிடம் கேட்டபோது, ‘இரண்டு மெய்வல்லுநர்களும் பயிற்றுநரும் தனிப்பட்ட அழைப்பின்பேரிலேயே இந்தப் போட்டியில் பங்குபற்ற ஜெனீவா சென்றனர். அதற்கு நாம் பொறுப்பல்ல. சனிக்கிழமை (10) நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குபற்றிய பின்னர் கிரேஷான் தனஞ்சய தலைமறைவாகிவிட்டதாக அறியக் கிடைத்தது’ என்றார்.
நீளம் பாய்தலில் பங்குபற்றிய கிரேஷான் தனஞ்சய 3 முயற்சிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைப் பாயத் தவறினார்.
இது தொடர்பாக இலங்கை மெய்வல்லுநர் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுக்கும் எனக் கேட்டதற்கு, ‘தனஞ்சய தப்பிச்சென்றது சட்டவிரோதமானது. இப்போதைக்கு எம்மால் எதனையும் கூறமுடியாது. செவ்வாய்க்கிழமை சங்க பிரதிநிதிகள் கூடி இது குறித்து விரிவாக ஆராயவுள்ளோம்’ என சமன் குமார குணவர்தன கூறினார்.
இதேவேளை பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குபற்றிய சாரங்கி டி சில்வா 6.00 மீற்றர் தூரம் பாய்ந்து 9ஆம் இடத்தைப் பெற்றார்.சாரங்கி டி சில்வாவும் பயிற்றநர் குலரட்னவும் செவ்வாய்க்கிழமை நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, அண்மைக்காலமாக இலங்கை விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் பெருமளவில் தலைமறைவான சம்பவங்கள் பதிவாகிவருகின்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு பெறுவதற்காக விளையாட்டு வீரர்கள் வெளிநாட்டு விஜயங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வதாக கூறப்படுகிறது.

