சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் கொண்ட குழுவொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (09) காலை சிலாபம் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இந்த சட்டவிரோத முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரகசியத் தகவலின் பேரில் கடற்படையினர் விசேட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு நேற்று காலை சிலாபம் முகத்துவாரத்தில் விசாலமான வான் ஒன்றை சோதனையிட்டதுடன் 19 பேர் கொண்ட குழு, வான் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குழுவில் வான் சாரதி மற்றும் அவரது உதவியாளர் உட்பட 16 ஆண்கள், 01 பெண் மற்றும் நான்கு சிறுவர்கள் (03 சிறுவர்கள் மற்றும் 01 சிறுமி) உள்ளனர். சந்தேகநபர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

