கேகாலை மாவட்டம், ரம்புக்கனை, தொம்பேமட பிரதேசத்தில் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை ஏற்பட்ட மண் சரிவினால் குடும்பத்தின் வீடு முழுவதும் குப்பைகளால் மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் ஒரு பெண் மற்றும் அவரது 8 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது கணவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாரம்மல வென்னொருவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1,836 குடும்பங்களைச் சேர்ந்த 7,167 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய(9) நிலவரப்படி ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக களனி, ஜின் மற்றும் களு ஆகிய ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.வெள்ளம் காரணமாக ஆற்றங்கரையோர தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

