இந்த அரசாங்கத்தில் இருக்கக்கூடிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களாலேயே எதுவும் செய்யமுடியாத நிலைமை இருக்கும் பொழுது ஒரு நாட்டினுடைய ஜனாதிபதியால் உருவாக்கப்படுகின்ற செயலணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் எதையும் சாதித்திட முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,மனித குலத்துக்கு எதிரான செயற்பாட்டை செய்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால், அந்த நாட்டு மக்களுடைய நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதற்கு எங்களுடைய நாடு உதாரணமாக இருக்கின்றது.
இந்த நாட்டிலே இன்று பால்மாவின் விலை எரிவாயுவின் விலை சீனியின் விலை போன்றன உச்சத்தைத் தொடும் நிலையில் காணப்படுகின்றது.
கொரோனா உலகம் முழுவதையும் பாதித்தது. அந்த வகையில் இலங்கையையும் பாதித்தது.
இலங்கையினுடைய குடியகழ்வு குடிவரவு அலுவலகங்களுக்கு முன்னால் இளைஞர்கள் மிக நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.சிங்கள மக்களே இந்த நாட்டில் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது.
துரதிஷ்டவசமாக சிங்கள மக்களால் மிகப்பெரிய தலைவராக இன்றைய ஜனாதிபதி கருதப்பட்டார். அதனால் அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ஆனால் இன்றைக்கு அதன் உண்மையை மக்கள் உணர்ந்து கொண்ட நிலைமை காணப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக முழுமையாக வெறுப்படைந்து போயிருக்கின்றனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இவரை போன்ற தலைவர்களை கண்டிருக்கமாட்டார்கள். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கவேண்டி, இந்த விடயங்களில் இருந்து தப்புவது தொடர்பாக தப்புக்கணக்கு போட்டு மீண்டும் சிங்கள மக்களிடம் தேசிய சிந்தனையை உருவாக்கி விட முடியும் என்று தவறான கணக்கை தான் போடுகிறாரென்றே நாம் எண்ணுகிறோம்.
குற்றவாளியாக வந்து பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரருடைய தலைமையில் ஒரு செயலணியை ஜனாதிபதி நியமித்திருக்கிறார். ஞானசார தேரர் தலைமையிலான
அணியில் தமிழ் மக்கள் யார் இருந்தாலும் எதுவும் செய்துவிட முடியாது. இந்த அரசாங்கத்தில் இருக்கக்கூடிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களாலேயே எதுவும் செய்யமுடியாத நிலைமை இருக்கும் பொழுது ஒரு நாட்டினுடைய ஜனாதிபதியால் உருவாக்கப்படுகின்ற செயலணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் எதையும் சாதித்திட முடியாது.
ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் தேசிய எழுச்சியை உருவாக்கி தன்னை ஒரு சிங்கள பௌத்த மக்கள் பெருந்தலைவராக காட்ட ஜனாதிபதி முயற்சிக்கிறார். சிங்கள மக்கள் மீண்டும் தவறிழைப்பவர் என்று நான் நம்பவில்லை. வடக்கு கிழக்கு மக்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார்.

