தாமும் தமது அரசாங்கமும் எதிர்பார்த்ததை போன்று செயற்படவில்லை என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
நேற்று இலங்கை இராணுவத்தின் ஆண்டு நிறைவு நிகழ்விலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே என்னை இந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருக்கிறார்கள். நான் கடமையேற்ற காலம் முதலான கடந்த இரண்டு வருடங்களில், முழு உலகமும் வரலாற்றில் எப்போதும் முகங்கொடுக்காத நிலைமைக்கு, கொவிட் தொற்று காரணமாக முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, நாம் கடந்த இரண்டு வருடங்களாகப் போராடியுள்ளோம். நாட்டை முடக்குதல், பல்வேறு தடைகள் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நிலையில் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது. நான் அதற்காக நியாயம் கூறிக்கொண்டிருக்கப் போவதில்லை.
மக்களுக்காக இந்நிலைமையிலும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். என் மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்கள் வைத்த எதிர்பார்ப்புக்கமைய செயற்படவில்லை என்று அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். நான் மட்டுமன்றி அமைச்சர்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனாலும், கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்தி, புதிய இயல்பு நிலைமையின் கீழ் இந்நாட்டைத் திறந்து, புதிய உத்வேகத்துடன் இந்நாட்டை முன்னேற்றுவேன் என்று, மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அதற்காக நாம் அனைவரும் இணைந்து ஒன்றாகச் செயற்பட வேண்டும்.
அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்குவதற்கு, அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன் என்றார்.

