24.5 C
Colombo
Sunday, October 11, 2026

எமது பொறுமைக்கும் எல்லையுண்டு – முன்னாள் எம்.பி. சரவணபவன் எச்சரிக்கை

அமைதியாக எமது வழிபாடுகளை முன்னெடுக்கத் தடைகளையும் – இடையூறுகளையும் ஏற்படுத்தி எம்மை மீண்டும் மீண்டும் சீண்டுகின்றீர்கள். பொறுமைக்கும் எல்லையுண்டு. எம்மை சீண்டுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு. இவ்வாறு எச்சரித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன்.

வெடுக்குநாறி ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை முன்னெடுக்க விடாது பொலிஸார் மேற்கொண்ட பலப்பிரயோகம் மற்றும் 8 பேர் கைது செய்து மறியலில் வைக்கப்பட்டுள்ளமை ஆகியவை தொடர்பில் கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,
சிங்கள – பௌத்த பேரினவாதத் திமிரில் சிறிலங்கா பொலிஸ் திணைக்களம் நடந்து கொண்டிருக்கின்றது. வெடுக்குநாறிமலையை ஆக்கிரமிக்க சிங்கள – பௌத்தர்கள் துடிக்கின்றனர். அவர்களின் ஏவல் நாய்களாக செயற்பட்ட பொலிஸார் எமது மக்களை கைது செய்திருக்கின்றனர்.
சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலையில் குழப்பம் விளைவிக்கும் வகையில் சிங்கள மக்களை அறைகூவி அழைத்த, குருந்தூர்மலையின் விகாராதிபதிக்கு எதிராகவே பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அதைவிடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படிந்து செயற்பட்ட இந்துக்கள் மீது பொலிஸார் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டியமை ஏற்க முடியாதது.
பொலிஸார் 8 பேரைக் கைது செய்துவிட்டு அவர்களது கைதுக்கான காரணத்தை இப்போதுதான் தேடுகின்றனர். ஏதாவது சூழ்சிகள் செய்து அவர்களை சிறையிலடைப்பதற்கும் சிந்திக்கக் கூடும். அதற்கான திட்;டங்களை சிங்கள – பௌத்த மேலாண்மையை நிலைநிறுத்தச் செயலாற்றும் அரச திணைக்களங்கள் செயற்படுத்துவதாக ஊர் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
அவ்வாறு ஏதாவது நடக்குமாக இருந்தால் எமது மக்கள் பார்த்துக்கொண்டு பேசாமடைந்தகளாக இருக்க மாட்டார்கள். பொறுமைக்கும் எல்லையுண்டு. வெடுக்குநாறி ஆலய விவகாரத்தில் அன்றிலிருந்து இன்று வரை பொலிஸாரின் பாரபட்சமான செயற்பாடுகள் எமக்கு பெரும் ஆத்திரத்தையே ஏற்படுத்துகின்றது. விளைவுகள் விபரீதமாவதற்குள் அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் – என்றுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles